தேர்தலுக்கு அஞ்சி அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் மறுக்கிறது!!

அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்வரும் தேர்தலில் தமக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என அரசாங்கம் அஞ்சுவதாக யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களராஜா தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நான்கு- ஐந்து வருடங்களுக்கு முன்னர் சுமார் 200 பேர்வரை அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது சுமார் நூறு வரை குறைவடைந்துள்ளது. ஆனால், அவர்கள் எவரும் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தின் காரணமாக விடுவிக்கப்படவில்லை.

இதேவேளை, பெரும்பாலும் குடும்ப தலைவர்கள் இவ்வாறு அரசியல் கைதிகளாக சிறையில் வாடுகின்ற நிலையில் அவர்களது குடும்பத்தினர் அங்கு வறுமையில் வாடுகின்றனர். தமிழ் அரசியல் கைதிகள் தென்பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளதால், உறவுகள் அவர்களை சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகளும் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

யுத்தத்தின்போது பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருந்த எமது மக்கள் தொடர்ந்தும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே அரசியல் கைதிகளின் விடுதலையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இந்த செயற்பாடு துரிதப்படுத்தப்படும் வேகத்திலேயே நல்லெண்ணத்திற்கான நடவடிக்கைகள் தங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Posts