உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர். அவ்விருவரினதும் கட்சிகள் எப்போதுமில்லாதவாறு சரிவைச் சந்தித்துள்ளன.
அவ்விரு தலைவர்களாலும் நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவித்து வந்தார். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்ல நெலும்மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.