நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நிறைவடையும் வரையிலும் தேர்தலில் தொடர்பில் பல்வேறான சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்றன. அவற்றில் சில…
ரணிலுக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, நடந்து முடிந்த தேர்தலில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
அவர், 500,566 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சாதனையை முறியடித்துள்ளார்.
கூவ மறந்த சேவல்
கேகாலை, பதுளை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தனித்து களமிறங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த மாவட்டங்களில் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.
சைக்கிள் பஞ்சரானது
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனித்து களமிறங்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எந்தவொரு ஆசனத்தையும் வெற்றிக்கொள்ளவில்லை.
வீடு நிரம்பியது
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீட்டு சின்னத்தில் தனித்து களமிறங்கிய தமிழ் அரசுக்கட்சி 14 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
தீப்பந்தம் அனைந்தது
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தலைமையில் தீப்பந்தம் சின்னத்தில் இம்முறை களத்தில் குதித்திருந்த ஜனநாயகக் கட்சி, எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.
ராஜபக்ஷ குடும்பத்தில் ஒருவர் அவுட்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச் சேர்ந்த நிரூபமா ராஜபக்ஷவுக்கு, இம்முறை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.
ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகியோரே ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து தேர்தல் களத்தில் குதித்தவர்களாவர்.
நாகம் படுத்தது
நாகபாம்பு சின்னத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுன எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை. களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் செயலாளர் ஞானசார தேரர், 5,727 வாக்குகளை பெற்றுள்ளார்.
சிலந்திக்கு இல்லை
சிலந்தி சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்து களமிறங்கிய ஜனநாயக போராளி கட்சி எந்தவொரு ஆசனத்தையும் வெற்றிக்கொள்ளவில்லை.
குருநாகல் தப்பியது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
2010ஆம் ஆண்ட நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 10ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 5ஆசனங்களையும் இந்த மாவட்டத்தில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பசிலின் கோட்டை யானை வசம்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கோட்டையான கம்பஹாவை ஐக்கிய தேசியக்கட்சி 27,046 மேலதிக வாக்குகளினால் தம்வசப்படுத்திகொண்டுள்ளது.
கம்பஹா மாவட்ட முழு வாக்குகளின் பிரகாரம் ஐக்கிய தேசியக்கட்சி 577,004 வாக்குகளை பெற்றுக்கொண்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 549,958 வாக்குகளை பெற்றுள்ளது.
முன்னாள் எம்.பி.க்கள் தோல்வி
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தோல்வியை தழுவியுள்ளனர்.
பியசேன கமகே, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா, ஜகத் புஷ்பகுமார, நிரூபமா ராஜபக்ஷ, நந்தமித்ர ஏக்கநாயக்க, உதித்த லொக்குபண்டார, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் ரோஹன திஸாநாயக்க ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.
வியாழனன்று சத்தியப்பிரமாணம்
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை (20), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதலான உறுப்பினர்களின் நம்பிகையை வெற்றெடுத்துள்ள உறுப்பினரை, பிரதமராக பதவியேற்குமாறு ஜனாதிபதி அழைப்பார்.
அதன்பிரகாரமே பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி அழைப்புவிடுப்பார் என்று அந்த தகவல் தெரிவித்தது.