தேனீக்கிராமம் தொடக்க நிகழ்ச்சி கோண்டாவிலில் கோலாகலம்

தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தையும், உலக தேனீக்கள் தினத்தையும் முன்னிட்டு முன்னெடுத்துள்ள தேனீக்கள் கிராமம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (05-06-2018) கோண்டாவிலில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது.

மகரந்தங்களைக் காவுவதன் மூலம் இயற்கைச் சூழலுக்கும், விவசாயத்துக்கும் பாரிய பங்களிப்பைச் செய்துவருகின்ற தேனீக்கள், விவசாய இரசாயனங்களினாலும் நகரமயமாக்கலினாலும் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு தேனீக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேனீ வளர்ப்பின் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தேனீக் கிராமம் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. முதலாவது கிராமமாகக் கோண்டாவில் தெரிவுசெய்யப்பட்டு, முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது பயனாளிகளுக்கு தேனீப்பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கோண்டாவில் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு தேனீப்பெட்டிகளை வழங்கிவைத்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கததின் தலைவர் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன் சிறப்பு விருந்தினராகவும், வைத்தியகலாநிதி சிவன்சுதன், பேராசிரியர் சோ.கிருஷ்ணராசா, சட்டத்தரணி தி.அர்ச்சுனா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

இணுவையூர் ரசிகப்பிரிய சபா கலை வளர்ச்சி மன்றத்தினரதும், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளினதும் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.

தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் தேனீ வளர்ப்புப் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், பயிற்சியின் பின்னர் அவர்கள் அனைவருக்கும் தேனீக்குடியிருப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts