எமக்கெதிராக பெரும்பான்னை அரசு தொடுக்கின்ற அடக்குமுறைகளை நாம் தடுக்க வேண்டுமானால் எமது தேசம் அங்கிகரிக்கப்பட்டால் மாத்திரமே அது நடைமுறைச்சாத்தியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் கேள்வி நேரம் எனும் நிகழ்வில் தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
இந்த தீவில் இரண்டு தேசங்கள் இருக்கின்றன இந்த இரண்டு தேசங்களும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு நாடாக எமது நாடு மாற்றி அமைக்கப்படவேண்டும், அதுவே அமது கட்சியின் திடமான நிலைப்பாடு,திம்பு கோட்பாட்டின் அடிப்படையில்தான் நாம் இதை முன்வைக்கின்றோம்.
எம்மை பொறுத்த வரையில் சமஸ்டி தீர்வு என்பது இரண்டு வகைப்படுன்றது, ஒன்று இரண்டு தேசங்களை கூட்டுவது,இன்னொன்று அதிகாரப்பகிர்வு. எம்மைப்பொறுத்தவரையில் அதிகாரப்பகிர்வில் நாம் உடன்படாத காரணம் இவ்வாறு பகிரப்படும் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் எந்த சமயத்திலும் மீள பெற்றுக்கொள்ள கூடிய நிலை உள்ளது, மஹிந்த ராஜபக்ச போன்ற சர்வாதிகாரி ஒருவர் எதிர்காலத்தில் ஆட்சிப்பீடம் ஏறும்போது இவ்வாறான அதிகாரங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்.
13ம் திருத்தச்சட்டத்திலும் இவையே நடைபெற்றுள்ளது, அதை தவிர்க்க வேண்டுமானால் அதிகாரங்கள் கூட்டப்பட்ட ஒரு சமஸ்ரி முறை உருவாக்கப்படவேண்டும் அவ்வாறான பட்சத்தில் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டிய சூழ்சிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசங்களின் அனுமதியை மத்தியஅரசு பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதனால்தான் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்ட சமஸ்ரி முறையை நாம் கோருகின்றோம், ஏனெனில் ஆட்சியாளர்கள் மாறுகின்றபோதும் எமது அதிகாரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பது எமது நிலைப்பாடு. கடந்த கால எமது வரலாற்றின் அடிப்படையில் நாம் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
இது நடைமுறைச்சாத்தியம் என்பது தொடர்பா ஒரு தெளிவான முடிவை எங்களால் காண முடியவில்லை கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கம் எமக்கு தந்த நடைமுறைச்சாத்தியம் என்னவென்றால் நாம் எதையுமே கோட்கக்கூடாதென்பது, எனவே இது நடைமுறைச்சாத்தியமா இல்லையா என்பது தொடர்பில் நாங்கள் கருத்திலெடுக்க தயாரில்லை.
எங்களுக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறைகள்,பாகுபாடுகள் இவைகளை நாம் தடுக்கவேண்டுமானால், பறிக்கப்படும் எமது நிலங்களை நாம் தடுக்கவேண்டுமானால் எமது தேசம் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே அது நடைமுறைச்சாத்தியமாகும் என்பது எமது திடமான நிலைப்பாடு, இதிலிருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்
இளையோருக்கான வேலை வாய்ப்பு தற்போது பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது,அரச நிறுவனங்களில் மட்டும் தான் தொழில் செய்ய வேண்டும் என்று பலர் நினைப்பது அர்த்தமற்றது.தனியார் நிறுவனங்களிலும், தொழில் செய்ய முடியும் ஆனால் அரச நிறுவனங்கள் தொடர்ச்சியாக இயங்கும் என்பதால் பலர் அரச துறைகளில் நாட்டம் கொண்டு அரச நிறுவனங்களை நாடுகின்றனர் இந்நிலை மாற்றி அமைக்கப்படவேண்டும்
அரச நிறுவனங்களை நாடும் இளைஞர்,யுவதிகள் தனியார் நிறுவனங்களை வெறுத்து ஒதுக்கும் நிலை தோன்றி வருகின்றது.அதற்கு காரணம் தனியார் நிறுவனங்கள் சில ஒழுங்காக இயங்குவதில்லை, மற்றும் போதியளவு தனியார் நிறுவனங்கள் வடக்கில் இல்லை என்பது தான்.
ஆகவே எதிர்வரும் காலங்களில் இளைஞர்,யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியுடன் தனியார் நிறுவனங்களை அமைத்துக் கொடுத்து வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்றார்.