தியகமவில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றெடுத்த ஹாட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், குண்டெறிதல் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இந்த இரண்டு தங்கப் பதக்கங்களையும் திங்கட்கிழமை (08) சில மணித்தியாலங்கள் இடைவெளியில் மிதுன்ராஜ் வென்றெடுத்தமை விசேட அம்சமாகும்.
குண்டெறிதல் போட்டியில் மீதன்ராஜ் 13.06 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்திற்கு 2 தங்கங்கள் உட்பட 4 பதக்கங்கள் திங்கட்கிழமை (08) கிடைத்தன.
சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கமும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஒரு தங்கப் பதக்கமும், விக்டோரியா கல்லூரிக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியின் பி. அபிஷாலினி 2.90 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும் கே. மாதங்கி 2.30 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். பல்கலைக்கழக வீராங்கனை என். டக்சிதா 3.40 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் எஸ். கிறிஸ்டிகா 2.60 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
கனிஷ்ட தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தலில் விக்டோரியா கல்லூரி பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.
இது இவ்வாறிருக்க, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் கே. தேவமதுமிதன் (12.68 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை விநாயகமூர்த்தி சங்கீதா (30.48 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றார்.