தேசிய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கே.சத்தியபாலன் தெரிவித்தார்.
இந்தப் போட்டிகள் 4 கட்டங்களாக இடம்பெறவுள்ளன. முதல் மூன்று கட்டங்கள் பெரு விளையாட்டுக்கள் இடம்பெற்று தொடர்ந்து செப்டெம்பர் 30ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 04ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளது.
தடகள விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன. அத்துடன், பெரு விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு, கண்டி, அநுராதபுரம், கம்பஹா, அம்பாறை, யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளன.
மேற்படி போட்டிகளில் மாகாணங்களுக்கிடையிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற பெருவிளையாட்டு அணிகளும், முதல் நான்கு இடங்களையும் பெற்ற தடகள மற்றும் மைதான வீர, வீராங்கனைகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், தேசிய மட்டப் போட்டிகளின், போட்டிகள் யாழ். மாவட்டத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறையென்றும் அந்தவகையில், கரம் மற்றும் மென்பந்தாட்டத் துடுப்பாட்டம் ஆகியன யாழில் இடம்பெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.