மிலேனியம் சிட்டி விவகாரத்தையடுத்து புலனாய்வு பிரிவைச்சேர்ந்த 12 பேரை நாம் இழந்துவிட்டோம். அந்த இழப்பு ஈடுசெய்யமுடியாது. அவ்வாறான நிலையில் தேசிய புலனாய்வு சேவையை முடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தமக்குள்ள வரப்பிரசாதங்களை பயன்படுத்தியே புலனாய்வு துறைசார்ந்த அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்றும் அவர் சொன்னார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேசத்தின் தேவையை நிறைவேற்றும் நோக்கிலேயே புலனாய்வு துறையினரின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். மிலேனியம் சிட்டி விவகாரத்தை கடுமையாக விமர்சனம் செய்தவரும் இந்த குழுவில் இருக்கின்றார்.
புலனாய்வு துறையினரின் பெயர்விபரங்களை வெளியிடும் முயற்சியை கண்டிக்கின்றோம். இது மிலேனியம் சிட்டியின் இரண்டாவது பகுதியாகும் அதற்கு அனுமதிக்கமுடியாது என்றார்.
இது நாட்டின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும். அவ்வாறானவரின் தேவை நிறைவேறும்போது இந்நாடு எந்தநிலையில் இருக்கும் என்று தெரியாது என்றார்.
நாட்டின் ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்பட்டால் நாம் எந்த நாட்டில் வாழ்வது என்றும் அவர் வினவினார்.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியாக இருந்தாலும் நாம் அரசியல் சவால்களுக்கு முகம்கொடுத்துகொண்டிருக்கின்றோம். இலங்கையை தூக்கி ஆட்டுவதற்கு ஒரு குழு முயற்சிக்கின்றது. அதற்கு இடமளிப்பதற்கு இலங்கை தயாரில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம்தொடர்பில் புலனாய்வு துறைக்கு தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில் செயற்பட்டு சந்தேகநபரை கைதுசெய்தோம். இதனை பல குழுக்கள் பல்வேறான முறையில் பார்த்தன.
அளுத்கமை மற்றும் பேருவளையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையை தேசப்பற்றாளர்கள் வரவேற்றுள்ள போதிலும் அந்த சம்பவத்தையடுத்து இந்நாடு தீப்பற்றி எரியவில்லையே என சிலர் கவலைப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
உள்நாட்டு சக்திகளை பயன்படுத்தி நாட்டை தீ மூட்டுவதற்கு வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன என்றார்.
இது சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட இன்னும் பல இனங்களை கொண்ட நாடு என்பதனை நாடாளுமன்ற வரபிரசாதங்களை கொண்டுள்ள சிலர் மறந்துசெயற்படுகின்றனர். தங்களுடைய வரபிரசாதங்களை பயன்படுத்தி சிலர், நாட்டின் ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
இனங்களுக்கு இடையிலான அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளை சிலர் முன்னெடுப்பதற்கும் முயற்சிக்கின்றனர்.
அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்திற்கு அடுத்து இந்நாடே தீபற்றி எரியும், இந்த சந்தர்ப்பத்தில் குழப்பிய குட்டையில் நாம் மீன் பிடித்து கொள்ளலாம் என்று சிலர் நினைத்தனர். எமது புலனாய்வு பிரிவினரின் செயற்பாட்டினால் இந்நாடே தீ பற்றி எரியவிருந்தமை தடுக்கப்பட்டுவிட்டது.
அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்தையடுத்து மேற்குல நாடுகளின் தூதுவராலயத்திலிருந்து, நடந்தது போதாதா என்றும் வினவப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டை குழப்பி அதில் குளிர்காய்வதற்கு முயற்சிக்கின்ற இவ்வாறான தேச துரோகிகள் தொடர்பில் மக்கள் கவனமாகவும் அவதானமாகவும் இருக்கவேண்டும் என்றார்.