தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் தமிழ் மொழி சம்பந்தமான போட்டிகள் வலய, மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசிய தமிழ் மொழித்தின விழாவும் கண்டி மாநகரில், ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஏற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகள், செயலாளர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் படி ஒக்டோபர் மாதம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய தமிழ் மொழி தினத்தில் காலையில் மாபெரும் கலாசார ஊர்வலம் ஒன்று கண்டி நகரில் நடைபெற உள்ளது. இதில் சகல மாகாணங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் நடைபெறுவதுடன் அந்தந்த பிரதேசங்ளுக்குறிய பண்பாட்டு நிகழ்வுகளும் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், கலை நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.
ஜனாதிபதி அவர்கள் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொள்ள உள்ளார். ஒன்பது மாகாணங்களினதும் முதல் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.