எதிர்வரும் காலங்களில் தேசிய கீதம் தமிழில் பாடப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நிகழ்வுக்கு நான் அழைத்துவரப்பட்டதன் பின்னர் இங்கே தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. இதனை நான் கேட்டுக்கொண்டிருந்தபோதே என் மனதில் மட்டில்லா மகிழ்ச்சி தோன்றியது. அதற்குக் காரணம் தேசிய கீதத்தினை நீங்கள் தமிழில் பாடியதுதான்.
தென்னிலங்கையில் நான் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் கேட்டிருக்கின்றேன். ஆனால் வட பகுதியில் தேசிய கீதத்தினை தமிழில் கேட்பதற்கு எனக்கு மிக சந்தோஷமாக இருக்கின்றது. ஆனால் நாம் தேசிய கீதத்தின் அர்த்தத்தினை புரிந்து கொண்டு தமிழில் பாட வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறும் நிகழ்வுகளில் அனைவரும் தேசிய கீதத்தினை தமிழில் பாடவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
புலம் பெயர்ந்த பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை எனக்குச் சந்தோசத்தைத் தருகின்றது. யுத்தத்தினால் நாட்டைவிட்டுச் சென்ற பல படித்த மனிதர்கள் மீண்டும் எமது நாட்டிற்குத் திரும்பி வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அவர்களின் தாய்நாடு இது. அவர்கள் இங்கு வந்து அவர்களது மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமென்பதே எனது விருப்பமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.