அமைச்சுப் பதவி எதுவும் தேவையில்லை, வெளியிலிருந்தே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். – இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என அறிய வருகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேசியபோதே சம்பந்தன் அவருக்கு இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருபவை வருமாறு:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவரின் அலுவலத்தில் சந்தித்துப் பேசினார்.
இதன்போது தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இதற்காக முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றை வழங்கவும் அவர் முன்வந்திருந்தார். இந்நிலையில் அவரின் அழைப்புக்குப் பதிலளித்த தலைவர் சம்பந்தன் அமைச்சுப் பதவி எதுவும் வேண்டாம் என மறுத்தார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணையாமல் வெளியிலிருந்தே முழுமையாக ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தேசிய அரசாங்கம் 100 நாளில் முடிவுக்கு வந்த பிறகு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் அமையும்போது அதில் அங்கம் வகிப்பது குறித்து அப்போது சிந்திக்கலாம் என்றும் அவர் கூறினார் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.