யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளிச்செல்ல முடியும் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) தேசிய அடையாள அட்டையின் 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் மட்டுமே வெளிவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்.மாவட்டத்தில் இன்று ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு வருகிறது.
அத்தியாவசியமற்ற சேவையில் ஈடுபடுபவர்கள் தமது சேவைகளை இடைநிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்கும். அரச அலுவலங்களில் பணிபுரிபவர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் சுழற்சி முறையில் தமது பணிகளை தொடர பணிக்கப்பட்டுள்ளது.
அநாவசியமாக வீதிக்கு மக்கள் வருவது, தேவையற்ற போக்குவரத்தில் ஈடுபடுவதை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசியமாக சேவைகளை அல்லது தொழில்களின் ஈடுபவர்களை தவிர ஏனைய அனைவரும் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவுத் தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியில்வர முடியும். அதுவும் அடையாள அட்டை இலங்கங்களின்படியே வெளியில் செல்ல முடியும்.
குறிப்பாக 1 அல்லது 2 இலக்கத்தை தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கமாக கொண்டவர்கள் திங்கட்கிழமையும், 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் செவ்வாய் கிழமையிலும், 5 அல்லது 6 இலக்கத்தை கொண்டவர்கள் புதன்கிழமையிலும், 7 அல்லது 8 இலக்கத்தை கொண்டவர்கள் வியாழக்கிழமையிலும், 9 அல்லது 0 இலக்கத்தை உடையவர்கள் வெள்ளிக்கிழமையிலும் வெளியில் செல்ல முடியும்.
இந்த அறிவுறுத்தல் மக்களுக்கு புதுமையாக இருக்கலாம். இருப்பினும் மக்களுடைய தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதனை பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் உண்ணிப்பாக கண்காணிப்பார்கள்.
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அனுமதி பெற்றவர்களுக்கே மாவட்டங்களை தாண்டி போக்குவரத்தினை செய்வதற்கு இடமளிக்கப்படும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.