தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டமைப்பு இதயசுத்தியுடன் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

dak-thevananthaaa

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்றய தினம் (12) இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆற்றல் இல்லாதவர்களாகவும், விருப்பம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர்.

1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபை முறைதான் நடைமுறைச்சாத்தியமானது என்று நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

ஆனால், அவர்கள் அப்போது அது உளுத்துப்போனது காலம் கடந்தது சாத்தியமற்றது என்று கூறிவந்தனர்.

ஆனால், இப்போது அதனையே அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அப்போதே அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் நாம் சுயநிர்ணய உரிமையை அக்காலப்பகுதியிலேயே பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும்.

ஆனால் துரதிஸ்டவசமாக அதனை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் எமது மக்கள் முள்ளிவாய்க்கால்வரை கொடிய யுத்தத்திற்கும் பேராவலத்திற்கும் முகங்கொடுத்தது மட்டுமன்றி விலைமதிக்க முடியாத உயிர்களையும் இழக்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருந்தது.

எமது நோக்கம் எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதேவேளை, அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க வேண்டுமென்பதேயாகும்.

இதற்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நோக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாது அதனூடாக தமது சுயலாப அரசியலை முன்னெடுப்பதுடன் அதனூடாக சுகபோக வாழ்க்கையையும் அனுபவிப்பதேயாகும்.

அந்தவகையில் தான் வடக்கு மாகாணசபையை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் அவர்களால் மக்கள் நலன்சார்ந்த எவ்விதமான அபிவிருத்திகளையோ செயற்திட்டங்களையோ முன்னெடுக்க முடியவில்லையென்பதுடன் அதில் அவர்கள் நாட்டமும் கொள்ளவில்லை.

ஆனால் வடக்கு மாகாண சபை எமக்கு கிடைக்கப் பெற்றிருந்தால் மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களினுள் வடமாகாணத்தை வளங்கொழிக்கின்ற பகுதியாக மாற்றியமைத்திருப்போம்.

இருந்தபோதிலும் வடக்கு மாகாண சபையை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடமாகாண அபிவிருத்தி செயற்பாடுகளை தடுக்க அரசும், ஆளுநரும் தடையாக இருப்பதாக உண்மைக்கு முரணான கருத்துக்களை கூறிவருகின்றனர்.

அவ்வாறான தடைகள் இருப்பின் குறித்த விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் பகிரங்க விவாதத்தில் கலந்து கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஏனைய மாகாணங்களை விடவும் வடக்கு மாகாண சபைக்கே அதிகளவான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் அதில் மிக சொற்ப அளவிலான நிதியே இதுவரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள், செலவிடப்படாத ஏனைய நிதி திறைசேரிக்கு திரும்பிச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts