தமிழரின் தேசம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா இல்லை மக்கள் கூட்டம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தலைமைகளினுள் விவாதங்கள் காணப்படுவதே தற்போதைய யதார்த்தமாகவுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்களே இறுதிதீர்மானம் எடுக்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு அறிமுகத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுதிட்ட முன் வரைபு யோசனையின் அடிப்படையானது நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை எட்டுவதேயாகும்.
முதலில் இனப்பிரச்சனை என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கிழக்கு மாகணத்திலேயே இனப்பிரச்சினையின் ஆரம்பமாகியுள்ளது. கிழக்கு மாகாணத்திலேயே முதலில் எமது மண் பறிபோக ஆரம்பித்தது. எமது பிரதேசங்கள் திட்ட மிட்ட வகையில் பறிக்கப்பட்டு பூர்வ அடையாளங்கள் அகற்றப்பட்டதோடு சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இற்றையக்கு ஆறு தசாப்த காலத்தில் இங்கு ஆரம்பமான அந்தப்பிரச்சினை இன்று ஒட்டுமொத்தமாக ஒரு தேச அடையாளத்தினை இல்லாதுசெய்யும் பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. மூன்று தசாப்தமாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்பமுடியாதவாறு வெளியாரின் உதவியுடன் போட்டித்தன்மையை அதிகரித்திருக்கின்றார்கள். அதேபோன்று கலாசாரத்தினையும், பண்பாடுகளையும் அழிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இலங்கைத்தீவில் தமிழர் தேசம் என்ற அடையாளத்துடன் வாழ்வதை இல்லாது செய்யும் செயற்பாடுகளை மாறிமாறி ஆட்சியில் அமர்ந்திருந்த அரசாங்கங்கள் மேற்கொண்டுவதந்தன. இதுவே இனப்பிரச்சினையாகும். ஆகவே தமிழரின் தேசத்தை உறுதிப்படுத்தப்படும் வகையிலும் கடந்த காலத்தில் நடைபெற்ற விடயங்கள் மீள நிகழாதிருப்பதை உறுதி செய்யும் வகையிலான உத்தரவாதங்களை மையமாகக் கொண்டே தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழர்களின் தேசம் என்பது கூறப்படாது தமிழர்கள் மக்கள் கூட்டம் என்ற வார்த்தைய பிரயோகிப்பதன் மூலம் உரிமைகளை, அபிலாஷைகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமா என்றதொரு விவாதம் தமிழ்த்தலைமைகளிடையே காணப்படுகின்றது. ஆகவே அதனை மக்களே தீர்மானிக்கவேண்டும்.
மக்கள் கூட்டம் எனக் கூறுகின்றபோது அந்த வார்த்த தேசங்களை மட்டும் அடையாளப்படுத்துவதாகவில்லை. சிறுபான்மை இனங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவே அந்த வார்த்தை காணப்படுகின்றது. சிறுபான்மை என்ற அடிப்படையில் காணப்படும் சட்டங்களுக்கும், ஒரு இனத்தின் தேசம் என்ற அடையளாத்தின் அடிப்படையில் காணப்படும் சட்டங்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
அதேநேரம் தேசம் என்ற அடையாளத்தைப் பேணும் மக்கள் கூட்டத்திற்கே சுயநிர்ணய உரிமை கோரும் அதிகாரம் இருக்கின்றது. தேசம் என்ற வார்த்தையானது தமிழரசுக்கட்சியாலேயே உருவாக்கப்பட்டதாகும். அது வெறுமனே வார்த்தையாக கருதமுடியாது.
இதற்காகவே 2009ஆம் ஆண்டுவரையில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஆணை வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆகவே தேசம் என்ற விடயத்தில் அங்கீகரிக்கப்போகின்றோமா அல்லது மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றோமா என்பதே தற்போதுள்ள மக்கள் முன்னுள்ள பெருவினாவாகும். ஆகவே மக்கள் அது தொடர்பில் முழுமையான பங்களிப்புடன் தீர்மானிக்கவேண்டும் என்றார்.