தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்பட மாட்டாது: பிரதமர் விசேட உரை

2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைப்படி தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை 2 வீதத்தில் இருந்து 4 வீதமாக அதிகரிப்பதனால் அனைத்து துறைகளிலும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் ஏற்படலம். ஆகவே தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்பட மாட்டாது.என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தில் விஷேட உரை நிகழ்த்திய பிரதமர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

நாட்டில் மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழக்கூடிய விதமான பொருளாதார சூழல் உருவாக்கப்படும்.

ராஜபக்ஷ ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை விடுவிக்க விருப்பமற்றவர்களும் இருக்கின்றார்கள். இதன்மூலம் நாடு அழிவடைவதை பார்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது.

பின்னர் “நல்லாட்சி அரசாங்கம் நாட்டை அழித்து விட்டது நாட்டை சரி செய்ய முடிவது எமக்கே” என்று கூறி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.

நாம் ஒருபோதும் அதற்கு இடமளிக்க மாட்டோம். நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு மீண்டும் நாட்டை அழிவடைய செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டோம்.

கடந்த ராஜபக்ஷ ஆட்சியில் கடன்களுக்கு மேல் கடன் பெறப்பட்டது. ஒரு கடனை செலுத்துவதற்காக மேலும் கடன் பெறப்பட்டது. இதனால் வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த அதிக கடன் சுமையால் நாட்டினுடைய மொத்த வருமானத்தின் பெரும்பகுதி அந்தக் கடன்களை திருப்பி செலுத்துவதற்கு செலவிடப்படுகின்றது.

இதன் காரணமாகவே வரி முறைகளில் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. 2017ம் ஆண்டில் புதிய வரி முறையை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதே போல் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வரி முறைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அதேபோல் தற்போதைய சர்வதேச பொருளாதார நிலை காரணமாக பெருமதி சேர் வரியை 15% ஆக அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

எனினும் அத்தியவசியப் பொருட்களுக்கு பெருமதி சேர் வரி அறவிடப்படமாட்டாது. மின்சார சேவைக்கும் பெருமதி சேர் வரி அதிகரிக்கப்பட மாட்டாது.

அத்தியவசியப் பொருட்கள் அல்லாத தெரிவு செய்யப்பட்ட சில பொருட்களுக்கும் பெருமதி சேர் வரி அறவிடப்படமாட்டாது.

அத்துடன் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நாம் விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது சந்தையை நாம் விரிவுபடுத்த வேண்டும்.

ஆகவே நாம் உலக நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ள உள்ளோம். இந்தியாவுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

சிங்கப்பூர், ஜப்பான், சீனா, துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறோம். நடத்தவுள்ளோம்.

கல்வித் துறை விரிவுபடுத்தப்படும். அனைத்து பிள்ளைகளுக்கும் 13 வருட கல்வியை உறுதிப்படுத்துவோம். டிஜிட்டல் கல்வி முறையை புதிதாக உருவாக்குவோம்.

அதேபோல் பலமிக்க நடுத்தர வர்க்க மக்களை நாட்டில் உருவாக்குவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவோம். தோட்டப் புற மக்களுக்கும் காணி மற்றும் வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.

எமக்கு பின்னர் சுதந்திரம் அடைந்த பல ஆசிய நாடுகள் எம்மைவிட அபிவிருத்தியடைந்துள்ளன. நாம் தொடர்ந்தும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றோம்.

எம்மிடம் ஒரு தேசிய கொள்கை இல்லாமையின் காரணமாகவே நாம் இன்னும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம். எமது கொள்கைகள் அரசிற்கு அரசு வேறுபட்டிருந்ததுடன், அமைச்சர்களுக்கிடையிலான கொள்கைகளும் வேறுபட்டிருந்தது.

எமது அரசாங்கம் பொருளாதார ரீதியான தீர்மானங்களை திறந்த நிலையிலேயே முன்னெடுக்கின்றது. எந்தவித மறைவுகளும் இல்லை. ஆனால் கடந்த அரசாங்கத்தினால் ஒரு சிலரினாலே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

ஆகவே நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்துடன் ஒன்றிணைய அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

Related Posts