தேங்காய், இளநீர் விலை யாழில் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் தேங்காய் மற்றும் இளநீர் என்பன அதிகூடிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தேங்காய் ஒன்று 70 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், இளநீர் 120 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் வரட்சியான காலநிலை நிலவுவதுடன், ஒருவகை வைரஸ் காய்ச்சலும் பரவி வருகின்றது. இதனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விடுதிகள் நிரம்பி வழிவதுடன், வெளிநோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகின்றது.

நோயாளர்களின் முக்கிய நீர் தேவையாக இளநீர் பரிந்துரைக்கப்படுகின்றது. ஆனால், அதனைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். “வழமையாக யாழ்ப்பாணத்தில் இளநீர் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது இல்லை” என, இளநீர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

“யாழ்ப்பாணத்தில் தேவைக்கு போதுமானதாக இளநீர் கிடைப்பதில்லை. அவற்றை வெளிமாவட்டங்களிலிருந்து அவற்றைக் கொள்வனவு செய்து கொண்டு வருவதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது” என, வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related Posts