இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20, மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 3–0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து அதிர்ச்சியளித்தது.
அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி இன்று நடபெறவுள்ளது.இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்காக இலங்கை அணியில் திக்ஸில டி சில்வா புதிதாக இணைக்கப்பட்டுள்ளார். இவர் அதிரடி ஆட்டக்காரராக உள்ளூர் போட்டிகளில் அசத்தியவர். இதேவேளை இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா இருபதுக்கு 20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி
அஞ்சலோ மெத்தியூஸ் (தலைவர்), தினேஷ் சந்திமால் (உப தலைவர்), தனுஷ்க குணதிலக, சீகுகே பிரசன்ன, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், இசுரு உதான, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, அசேல குணரத்ன, சசித் பதிரன, சந்தகன், திக்ஸில டி சில்வா, நுவன் குலசேகர.
இலங்கை அணிக்கெதிராக இன்று களமிறங்கும் தென்னாபிரிக்க அணியின் முக்கிய வீரர்கள் அறுவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் தென்னாபிரிக்க அணியின் தலைவராக பர்ஹான் பெஹார்டீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ரபடா, அம்லா, அபோட், டுமினி மற்றும் குயின்டன் டி கொக் ஆகியோருக்கே ஓய்வளிக்கப்பட்டுள்ளது.இந்த வீரர்கள் அனைவரும் தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர்களாகத் திகழ்கின்றனர்.அவர்களுக்கு பதிலாக டேவிட் மில்லர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
முக்கிய வீரர்கள் இல்லாமல் இருபதுக்கு 20 தொடரை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்க அணி பலவீனமான அணியென்றும் எடுத்துக் கொள்ள முடியாது.
அதேவேளை டெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை அணி இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடர்களை கட்டாயம் வெற்றிபெற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எது எப்படியோ எதிர்வரும் இரண்டு தொடர்களிலும் இலங்கை அணி சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.