தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது.
வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
நேற்று காலை 10 மணியாளவில் தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சடலங்கள் மீட்கப்பட்டன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய தந்தை, 52 வயதுடைய தாய், 13 வயதுடைய மகள் மற்றும் 13 வயதுடைய உறவுக்கார சிறுமி ஒருவரும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த 65 வயதுடைய நபர் பிரபல வர்த்தகர் என்பதுடன், இவர்கள் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அவர்கள் நச்சு வாயுவை சுவாசித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.