தெல்லிப்பழை வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு கதிரியக்க சிகிச்சை சீராக இடம்பெறவேண்டும்!

“தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. புற்றுநோயாளர்களுக்கான கதிரியக்கச் சிகிச்சை ஒழுங்குமுறையில் இடம்பெறவேண்டும்” என்று மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் இன்று கட்டாணை உத்தரவை வழங்கியது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை மறுக்கப்பட்ட ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதே இந்த கட்டாணை உத்தரவை மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, இன்று வழங்கினார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் புற்று நோய் உள்ளதாக கண்டறியப்பட்ட பெண் ஒருவருக்கு கதிரியக்க சிகிச்சை வழங்குமாறு மருத்துவ வல்லுனரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் புதிய நோயாளருக்கு சிகிச்சை வழங்க முடியாது என்று தெல்லிப்பழை வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் திருப்பியனுப்பியுள்ளனர்.

அதனால் பாதிக்கப்பட்ட பெண், தனது சட்டத்தரணி திருமதி கஜப்பிரியா திருக்குமரன் ஊடாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

தனது உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் தான் உள்ளிட்ட புற்றுநோயாளர்களுக்கு ஒழுங்குமுறையில் சிகிச்சை வழங்குவதனை வெளிப்படுத்துவதற்கு தெல்லிப்பழை வைத்தியசாலை கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஆணை வழங்குமாறும் மனுவில் மனுதாரர் கோரியிருந்தார்.

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் பணியாற்றும் 8 கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டனர்.

இந்த மனு மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் திருமதி கஜப்பிரியா திருக்குமரனனின் ஏற்பாட்டில் சட்டத்தரணிகள், கலாநிதி. குமாரவடிவேல் குருபரன், விஸ்வலிங்கம் திருக்குமரன், அஜந்தன் ஆகியோர் முன்னிலையாகினர்.

“தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் முன்னெடுப்பதாகத் தெரிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொழிற்சங்க சட்டத்தின் அடிப்படையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவுமின்றி அவர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர்.

முறையாக அறிவிக்கப்படாத இந்த பணிப்புறக்கணிப்பு தொழிற் சங்கப் போராட்டம் அல்ல” என்று மன்றுரைத்த கலாநிதி குருபரன், இதைப் போன்ற சட்ட பூர்வமற்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் தொழிற்சங்கப் போராட்டத்தை மலினப்படுத்தும் எனவும் வாதிட்டார்.

மாவட்ட நீதிமன்றம் ஒன்று குடியியல் நடவடிக்கை கோவையின் பிரிவு 217 ‘எ’ மற்றும் ‘ஏ’ பந்திகளுக்கு கீழ் சட்ட பூர்வாமற்ற செயல்கள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி கட்டளை ஆக்க முடியும் என சட்டத்தரணி குருபரன் சுட்டிக்காட்டினார்

“புற்றுநோயாளர்களுக்கு கதிரியக்க சிகிச்சை ஒழுங்குமுறையில் வழங்கப்படவேண்டும். அதனை ஒழுங்குமுறையில் செய்யாதவிடத்து நோயாளிக்கு பாதிப்பு ஏற்படும்.

தற்போது நாட்டில் காணப்படும் கோரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக புற்றுநோயாளர்களுக்கு சீரான சிகிச்சை வழங்கப்படுவது மிக மிக அவசியமாகும்.

தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் யாழ்ப்பாணத்திலுள்ள புற்றுநோயாளர்கள் மட்டுமின்றி நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து சிகிச்சை பெறுகின்றனர்.

எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அவருக்கான நிவாரணத்தை மன்று வழங்கவேண்டும்” என்று நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்த சட்டத்தரணி, கலாநிதி. குமாரவடிவேல் குருபரன், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய கட்டளை மற்றும் ஆவணங்களை மன்றில் சமர்ப்பித்தார்.

சமர்ப்பணம் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த மன்று, பிரதிவாதிகளான தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் எட்டுப் பேரின் பணிப்புறக்கணிப்பு, புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. புற்றுநோயாளர்களுக்கு ஒழுங்கான முறையில் சிகிச்சைகள் இடம்பெறவேண்டும்” என்று கட்டாணை வழங்கி உத்தரவிட்டது.

இந்த கட்டாணை உத்தரவு வரும் 14 நாள்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று கோடிட்டு காட்டிய மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, மனுவை வரும் 22ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

பின்னணி

கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள், சாதாரண பணி நேரத்தில் வழங்க வேண்டிய சேவையை மேலதிக நேரத்தில் செய்து மேலதிக நேரக் கொடுப்பனவைப் பெற்றதாக குற்றஞ்சாட்டி கணக்காய்வு இடம்பெறுகிறது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள், கடமை புரிவது இல்லை. எனினும் புற்று நோய் இனங்காணப்பட்ட நோயாளிக்கு குறித்த கதிரியக்க சிகிச்சை அளிக்காவிடின் மீண்டும் புற்றுநோய் பரவும் நிலை கடுமையாகக் காணப்படுகின்றது. அதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை குறித்த உத்தியோகத்தர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மட்டுமே புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக காணப்படுகின்றது.

மட்டக்களப்பு திருகோணமலை , மாவட்டங்களில் இருந்தும் புற்றுநோய் சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களை குறித்த உத்தியோகத்தர்கள் தங்களால் சிகிச்சை வழங்க முடியாது, நாங்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுகிறோம் எனக் கூறி திருப்பி அனுப்புகின்ற நிலை காணப்படுகிறது.

Related Posts