தெல்லிப்பழை மகாஜனா, யூனியன் கல்லூரிகளின் கிணறுகளில் எண்ணெய்க் கசிவு

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிகளிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிவு இருப்பதாக சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, மாணவர்களுக்கான குடிநீருக்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இரு கல்லூரிகளின் அதிபர்களும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் க.ரட்ணகுமார், ‘கடந்த 6ஆம் திகதி சுகாதார பரிசோதகர்களால் எமது பாடசாலை கிணறு சோதனை செய்யப்பட்டு, அதில் எண்ணெய் கசிவுகள் தென்படுவதாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தனர்’ என்றார்.

‘இது தொடர்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகம், வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்து அவர்களின் மூலம், குடிநீர் வசதிகளை பாடசாலையில் மேற்கொண்டு வருகின்றோம். எமது பாடசாலையில் 1,020 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 60 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்’ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மகாஜனாக் கல்லூரி அதிபர் ம.மணிசேகரன், ‘எமது பாடசாலையில் பொதுக்கிணறு உள்ளது. நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் நீரை பெற்று வருகின்றோம். கிணற்று நீரின் மேற்பகுதி தூசுகள் படிந்த நிலையில் காணப்படுகின்றது’ என்றார்.

‘தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி, சுகாதார பரிசோதகர்களால் கடந்த வாரம் பரிசோதனை மேற்கொண்டு, எண்ணெய் கசிவு காணப்படுவதாகவும் குடிநீருக்கு உரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. அதற்கமைய குடிநீர் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளோம். எமது பாடசாலையிலுள்ள 1,700 மாணவர்களும், 75 ஆசிரியர்களும் இந்த நீரையே தற்போது பருகி வருகின்றனர்’ எனவும் அவ்வதிபர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார், ‘தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பிரிவின் கீழுள்ள கட்டுவன், மல்லாகம், தெல்லிப்பழை ஆகிய சுகாதார பரிசோதகர் பிரிவுகளிலுள்ள 800 க்கும் அதிகமான கிணறுகளில் எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளிலுள்ள கிணறுகளின் நீர் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் 90 வீதமானவை எண்ணெய் கசிவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

அத்துடன், ‘எண்ணெய் கசிவு ஏற்பட்ட கிணறுகளிலுள்ள நீரானது பாவனைக்கு உகந்ததல்ல. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பாக பிரதேச செயலகம், பிரதேச சபைக்கு ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளோம். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நீரை வழங்கி வருகின்றார்கள். எனினும் அவை போதியளவாக இருக்கவில்லை. இருப்பினும் குடிநீர் விநியோகமும் பரிசோதனை நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றது. அதிகாரிகள் கூடிய கவனம் எடுக்க வேண்டும்’ எனக் கூறினார்.

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால் சுற்றாடலிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, உத்துரு ஜனனி மற்றும் நொர்தேன் பவர் நிறுவனங்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts