தெல்லிப்பழை உண்ணாவிரத்தை எவரும் குழப்ப வில்லை – சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

tellippalai_policeதெல்லிப்பழையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது. அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. அந்த உண்ணாவிரத போராட்டத்தை எவரும் குழப்புவதற்கு முயற்சிக்கவில்லை என்று காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெல்லிப்பளையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது குழப்பம் விளைவித்ததாக மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வலி – வடக்கு பிரதேசங்களுக்கு தம்மை குடியமர அனுமதிக்கக்கோரி கடந்த மாதம் 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தினை நடத்துவது தொடர்பாக எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு பொலிஸார் போதிய பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.

அது மட்டுமல்லாமல் நிகழ்வு முடிவுற்ற நிலையில் மக்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பி செல்வதற்கு வாகன வசதி இல்லாமல் நின்றனர். அப்போது அம்மக்களை பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அவர்களின் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தேன்.

நீங்கள் கூறுவதுபோல் இந்நிகழ்வினை குழப்பும் வகையில் எவரும் நடந்துகொள்ளவில்லையெனவும், மக்கள் எவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கவில்லை, பொலிஸார் எவரையும் கைது செய்யவில்லையெனவும் இது தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் இன்றுவரை பதிவு செய்யப்படவும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts