தெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி!

தெல்லிப்பழை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 5840 ஏக்கர் காணியில் 984 ஏக்கர் காணியை விடுவித்து 2050 குடும்பங்களை அங்கு மீள்குடியேற்ற இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்-

நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்பும் போது. மோதல்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவது முக்கிய அம்சமாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தமது சொந்த இடங்கள் விடுவிக்கப்படாததால் யாழ். மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு மக்கள் இன்னும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இதன்படி மேற்படி குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள இடங்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அந்த மக்களை கட்டம் கட்டமாக மீள் குடியேற்ற அமைச்சர் டீ. எம். சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கமைய, யாழ். மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள இடங்களில் மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக தெல்லிப்பழையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 984 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்றார்.

Related Posts