தெல்லிப்பழை எட்டாம் கட்டைப் பகுதியில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டால், தெல்லிப்பழை எட்டாம் கட்டைப் பகுதியில் ,வாள்கள், இரும்புக் கம்பிகள் என்பவற்றுடன் சுமார் 20 பேர் , 10 மோட்டார் சைக்கிள்களில் இரவிரவாக அந்தப் பகுதியில் நடமாடியதால் பொதுமக்களிடையே பெரும் அச்சநிலை தோன்றியிருந்தது.
மாற்றுக் குழுவைச் சேர்ந்த ஒருவரை, இன்னொரு குழு வெட்டுவதற்கு துரத்தியதாகவும், அவர் தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகின்றது. பின்னர் இரு தரப்பினரையும் தெல்லிப்பழை பொலிஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் என்றும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் விசனமடைந்துள்ளனர்.
குறித்த வாள்வெட்டுக்கும்பலில் பிரதான சூத்திரதாரி கைக்குண்டு ஒன்றை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும், தெல்லிப்பழை இளைஞர் அமைப்பில் அங்கம் வகிப்பவர் எனவும் கூறப்படுகின்றது.