ந்தியத் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பளை அம்பனைப் பிரதேசத்தில் அலுமினியத் தொழிற்சாலையொன்றை திறந்துவைத்துள்ளது.
இந்நிகழ்வானது, பிரபல இந்திய, இலங்கை கம்பனிகளின் இயக்குனர் தி.தில்லைராஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக இந்த நிறுவனத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வுக்கு, சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், சம்பிரதாயபூர்வமாக ஓர் அலுமினியப் பானை உருவாக்கப்பட்டு அதற்கான பணத்தினைக் கொடுத்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பானையைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த நிகழ்வில் இந்தியத் தொழிலதிபர்களுடன் பல மக்களும் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்குவதற்காகவே குறித்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.