தெற்கு முற்போக்கு சக்திகளுடன் சேரத் தயாராகிறது கூட்டமைப்பு

இன அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப்போக்கிற்கும் எதிராக எழுச்சி மிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

mavai mp in

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நிதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வடக்குக்கு யாழ்தேவி அனுப்பப்பட்டுள்ளது, அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் பல்வேறு புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம இங்கு பேசினார்.

வடக்குக்கு யாழ்தேவி மட்டுமல்ல, வீதிகளும் போடப்பட்டன என்பதையும் நாம் அறிவோம். அபிவிருத்தி என்ற பெயரில் அதற்காக உலக நாடுகளிடம் பெற்ற கடன் எவ்வளவு? அவற்றில் வடக்கு அபிவிருத்திக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பதை அவர் அறிவிப்பாரா?

யாழ்தேவியை மட்டும் அனுப்புவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. ஜனநாயக உரிமைகளையும் வழங்காது அபிவிருத்தியால் தமிழர்களை அடிமைப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது. அரசின் இந்த உபாயத்தை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் அடிபணிய மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கு அவர்கள் அறவழியில் போராடுவார்கள். குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இனக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர்களின் இனப்பரம்பலையும், அடையாளங்களையும் மாற்றியமைப்பதற்குத் திட்டமிட்ட அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஒரு தேசிய இனத்தின் எதிர்காலத்தை அவ்வினத்தின் அடையாளங்கள்தான் தீர்மானிக்கும்.

இதேவேளை, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மட்டுமல்லாது, இன்று தென்னிலங்கை மக்களும் ஊழலுக்கு எதிராகவும், எதேச்சாதிகாரத்துக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

எனவே, ஜனநாயக உரிமைக்காகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தென்னிலங்கையில் குரல் எழுப்பிவரும் எழுச்சி மிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.

எமது மக்களுக்குரிய உரிமைகளை வென்றெடுக்கும் பயணத்தில் நாம் தெளிவாக இருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts