கடந்த ஒக்ரோபர் மாதத்துக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 46 பேருக்கு இலங்கை மின்சார சபையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் பின்னர் மகிந்த தலைமையில் அமைச்சரவை ஒன்று அமைக்கப்பட்டது. அதில் எரிபொருள் மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட சியம்பலாப்பிட்டிய இந்த நியமனங்களை வழங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
கடந்த 50 நாள்களாக நாட்டில் அரசியல் குழப்ப நிலமை காணப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் நியமனங்கள் எவையும் வழங்கப்படக் கூடாது என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார். அதையும் மீறி பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 46 பேருக்கு வடக்கு மாகாணத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது-:
”மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகங்களில் தென்னிலங்கையைச் சேர்ந்த 46 பேர் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் அனைவரும் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிய முடிகின்றது.
இவ்வாறான வெற்றிடங்களை எமது மாகாண இளைஞர்களுக்கு வழங்குங்கள் என்று நாம் கோரி வரும் நிலையில் இரகசியமான முறையில் விண்ணப்பங்கள் எவையும் கோரப்படாது இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசியல் குழப்பம் நிலவிய காலத்தில் வழங்கப்பட்ட நியமனங் களை இரத்துச் செய்ய வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் தலைமை அமைச்சரின் கவனத்துக்கும், அபிவிருத்திச் செயலணியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும்”.–- என்றார்.