‘நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரும்படி அரசாங்கம் எங்களை அழைக்கின்றது. அங்கு சென்றாலும் எங்களால் தீர்வுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது’ என அவுஸ்திரேலிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியிருந்ததாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறினார்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலக அரசியற் செயலாளர் எட்வினா சின்கிளேயா, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தேசிய ஆலோசகர் மைக் ஹில்மன் ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் புதன்கிழமை (29) இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர். இச்சந்திப்பு குறித்து மாவை சேனாதிராசாவிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
‘வடக்கில் இருக்கும் சூழ்நிலைகள் தொடர்பில் நிலவரங்கள் தொடர்பிலும் பிரதிநிதிகள் எம்மிடம் கேட்டறிந்தனர்.
தமிழ் மக்கள் பலர் தங்களது சொந்த நிலங்களில் இல்லாமல் அகதி முகாம்களில் இருப்பதாகவும், அரசாங்க உதவிகள் இல்லாமலும் பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கின்றனர்.
அதேபோல முஸ்லிம் மக்களும் வீடுகள் அற்ற நிலையில் வாழ்கின்றனர்.
இராணுவம் மக்களின் காணிகளில் வர்த்தக, விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹோட்டல்கள் அமைத்தும் உள்ளனர்.
ஆனால், அந்த இடத்துக்குரிய மக்கள் சொந்தமாக தொழில் செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
காபட் வீதிகள் போட்டதைத்தவிர வேறு எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளும் இங்கு நடைபெறவில்லை.
மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்கள் வடக்கில் இல்லை. தொழிற்சாலைகள் அமைப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை.
மக்களின் காணிகளை இராணுவம் எடுப்பதுடன், அந்த காணிகளுக்குள் புத்தர் சிலைகளை வைத்து விகாரைகள் கட்டுகின்றனர். தமிழ் மக்களின் குடிப்பரம்பலை குறைத்து சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கின்ற செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றன.
இந்தியாவில் இலங்கையர்கள் தங்கியுள்ள 115 அகதி முகாம்கள் இருக்கின்றன. அதனைவிட முகாம் தவிர்ந்த பிரதேசங்களில் 1 இலட்சத்து மேற்பட்ட மக்கள் இருக்கின்றனர்.
அந்த மக்களின் நிலைமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர தாமேதரதாஸ் மோடியுடன் கதைத்துள்ளேன்.
அவர்கள் இலங்கைக்கு வரவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இங்கு அவர்கள் வரும் போது அவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் அரசாங்கத்தால் உறுதிப்படுத்த வேண்டும்.
எங்களுக்கு நிலப்பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. அதற்கு உடனடியான தீர்வு வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த பின்னரே வடக்கில் அதிகளவான இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் முற்றுமுழுதாக இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் வடமாகாண மக்கள் இருக்கின்றனர்.
வடமாகாண சபைக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. அத்துடன், வெளிநாட்டவர்கள் வடக்குக்கு வருகை தருவதற்கும் தற்போது தடைகள் அல்லது கட்டுப்பாடு விதிக்கின்றனர். இது வடமாகாண சபையை செயற்படாமல் தடுக்கும் ஒரு நடவடிக்கையாகும்.
தேர்தல்களில் இராணுவம் தலையிடுகின்றது. தேர்தல் மூலம் மக்கள் வழங்கும் ஆணையை அரசாங்கம் ஏற்கவில்லை. இதனாலேயே தேர்தலில் இராணுவ தலையீடுகள் காணப்படுகின்றன. அதற்காகவே வடக்கில் ஆளுநரையும் மாற்றாமல் இராணுவம் சார்ந்த ஆளுநரை நியமித்துள்ளனர்.
வடமாகாணத்தில் வடமாகாண சபை தவிர்ந்து இராணுவம், ஆளுநர், மத்திய அரசு என பலதரப்பட்டவர்களின் ஆட்சி நடப்பதால் மக்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்படும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.
வடக்குக்கான போதியளவு நிதி தற்போது வெளியிடப்பட்டுள்ள 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் இல்லை என பிரதிநிதிகளுக்கு விரிவாக எடுத்துக்கூறியுள்ளேன்’ எனக மாவை மேலும் கூறினார்.