தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வு செய்தார். இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார்.

முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க துடுப்பாட்டக்காரர்கள் இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.3 ஓவரில் 191 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தனர்.

புவனேஸ்வர் குமார், பும்ப்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி முதலில் சற்று திணறினார். ஆனால் தவான் நம்பிக்கையுடன் விளையாடினார். நேரம் செல்ல செல்ல விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.

இதனால் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் இருவரை பிரிக்க திணறினார்கள்.

தவான் 61 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விராட் கோலி 71 பந்தில் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய தவான் 83 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 78 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது.

76 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்த விராட் கோலி.

தவான் அவுட் ஆனதும் யுவராஜ் சிங் களம் இறங்கினார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது.

இந்தியா 38 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 101 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்தும் யுவராஜ் சிங் 25 பந்தில் 23 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ´பி´ பிரிவில் இருந்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Related Posts