20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது.
6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (குரூப்-1), நியூசிலாந்து, இந்தியா (குரூப்-2) ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
டெல்லியில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்தும், மும்பையில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறும் 2-வது அரை இறுதிப்போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு ஆட்டமும் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் சூப்பர்-10 சுற்றில் டெல்லியில் நேற்று இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இலங்கை (குரூப்-1) அணிகள் சந்தித்தன. இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு போட்டியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
‘டாஸ்’ ஜெயித்த தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, தென் ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 120 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக திரிமன்னே 36 ரன்னும், தசுன் ஷனகா ஆட்டம் இழக்காமல் 20 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கைல் அப்போட், ஆரோன் பாங்கிசோ, பெஹர்டைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி கண்டது. ஹசிம் அம்லா 56 ரன்னுடனும், டிவில்லியர்ஸ் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். குயின்டன் டீ காக் 9 ரன்னிலும், கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 31 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 2-வது வெற்றி பெற்று தனது பிரிவில் 3-வது இடம் பிடித்தது. 3-வது தோல்வி கண்ட இலங்கை அணி 4-வது இடம் பெற்றது.
பெண்கள் கிரிக்கெட்டில் இலங்கை வெற்றி
5-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்களூருவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்ட இலங்கை-தென் ஆப்பிரிக்கா (ஏ பிரிவு) அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சமரி அதப்பட்டு 52 ரன்கள் சேர்த்தார். பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, இலங்கை வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களே எடுத்தது. இதனால் இலங்கை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை ருசித்தது. 2-வது வெற்றியை பெற்ற இலங்கை அணி தனது பிரிவில் 3-வது இடம் பிடித்தது. 3-வது தோல்வியை சந்தித்த தென் ஆப்பிரிக்க அணி 4-வது இடம் பெற்றது.
டெல்லியில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்தும், மும்பையில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 2-வது அரை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு ஆட்டங்களும் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.