தென்மராட்சி பிரதேசத்தை இரண்டு பிரதேச செயலக பிரிவாக மாற்றுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அமைச்சர் சுசில் பிரேமஜயந்திடம் தென்மராட்சி மக்களினால் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மக்களின் தேவைகள் குறித்த சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போதே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் குறித்த பிரதேச மக்கள் தங்கள் தேவைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவித்தனர்.
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் தென்மராட்சி பிரதேசம் பெரிய பிரதேசமாக உள்ளது. வடமராட்சி பிரதேசம் 3 பிரதேச செயலர் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவை இரண்டாக உருவாக்க வேண்டும் என தெரிவித்தனர்.
பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இது தொடர்பில் கவனத்தில் எடுப்பதாக தெரிவித்துள்ளதோடு இந்த பகுதி வைத்தியசாலைக்கு மேலதிகமாக ஒரு வைத்தியரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.