தென்மராட்சியில் 16 நாட்களில் கொரோனோவால் 4 பேர் உயிரிழப்பு – 118 பேருக்கு தொற்று!

தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம் பெற்றுள்ளதுடன், கடந்த 16 நாட்களில் மாத்திரம் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தினமும் சராசரியாக 8 முதல் 10 தொற்றாளர்கள் என்றளவில் எண்ணிக்கை உயரத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சுகாதார நடைமுறைகளை மக்கள் இறுக்கமாகப் பின்பற்றாமை காரணமாக சமூகத்தில் தொற்று தீவிரமாகப் பரவியிருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் நோய் அறிகுறிகளுடன் தாமாக வந்து அன்டிஜன் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலவச துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

அது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

அத்தோடு, காலதாமதமின்றி கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை, வரணி பிரதேச வைத்தியசாலை அல்லது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.

இவற்றுக்கு மேலதிகமாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் காலை 8.30 மணிக்கு குறித்த பரிசோதனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts