தென்மராட்சியில் நான்கு வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை!

தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதிகளிலுள்ள நான்கு வீடுகளுக்குள் வாள்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) இரவு 11.30 முதல் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 1 ஒரு மணிவரை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி டச் வீதியில் மடத்தடி பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் இரவு 11.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர்கள் வாள்களை கொண்டு அச்சுறுத்தி மூதாட்டியை தாக்கி காயப்படுத்தி அவர் அணிந்திருந்த தோடுகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.

அதன்பின் சங்கத்தானையில் உள்ள வீட்டுக்குள் நுழைந்து குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அத்துடன், இன்று(புதன்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் மீசாலை மேற்கில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தரை வாளால் வெட்டியதோடு வீட்டுக்கதவினை உடைத்து தங்கச் சங்கிலி மற்றும் இரண்டு காப்புகளையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதன்பின் மீசாலையில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள்ளும் நுழைந்துள்ளனர். இதன்போது அங்கிருந்தவர்கள் விழித்து கூக்குரல் எழுப்பியதையடுத்து கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு பேர் கொண்ட கொள்ளையர்களே நான்கு வீடுகளுக்குள்ளும் அடுத்தடுத்து நுழைந்திருக்கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொள்ளையர்களின் தாக்குதல்களில் பெண்ணொருவர் உள்ளடங்களாக மூவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சங்கத்தானையை சேர்ந்த மாணிக்கம் சிவராசா வயது 55, மீசாலை மேற்கைச் சேர்ந்த சின்னையா சுப்பிரமணியம் வயது 53 மற்றும் டச்வீதியை சேர்ந்த மூதாட்டி ஒருவருமே இவ்வாறு காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் குறித்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts