யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளில் 61 ஏக்கர் நிலத்தைக் கபளீகரம் செய்வதற்கு முயன்றது போலவே தென்மராட்சிப் பிரதேசத்திலும் சுமார் 300 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு இராணுவம் முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தென்மராட்சியில் தற்போது இராணுவம் நிலை கொண்டுள்ள 41 காணித் துண்டங்களைத் தமக்கு உரிமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தென்மராட்சிப் பிரதேச செயலரை இராணுவ அதிகாரிகள் கோரியிருக்கின்றனர்.
1996ஆம் ஆண்டு முதல் தாம் நிலை கொண்டுள்ள தனியார் காணிகளையும் தமக்கு உரிமைப்படுத்துமாறு இராணுவம் கோரியுள்ளது. இவ்வாறு இராணுவம் தங்கியுள்ள வீடுகள், காணிகளின் உரிமையாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் தற்போது வாடகை வீடுகளில் தங்கியிருக்கிறார்கள்.
இதேவேளை யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளில் அபகரிக்கப்பட உள்ள 61 ஏக்கர் நிலமும் 511ஆவது படையணியின் தேவைக்கு மட்டுமானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ஏனைய படையணிகளின் பயன்பாட்டில் உள்ள வேறு காணிகளும் இதேபோன்று அபகரிக்கப்பட உள்ளன.
இதேவேளை, இராணுவத்தினர் கோரும் காணிகளில் பெரும்பாலானவற்றை அரச திணைக்களங்கள், அலுவலகங்கள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான காணிகளை வழங்குவதா இல்லையா என்று இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் அந்தந்த பிரதேச செயலர்களே கொண்டிருக்கின்றனர் என்று கொழும்பிலுள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“பிரதேச செயலர்கள் உறுதியாக மறுக்கும் பட்சத்தில் படையினரால் அந்தக் காணிகளைப் பெறமுடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை. மீறி காணிகளை அபகரிப்பதாயின் அனைத்தையும் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் சுவீகரிக்க முடியும்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.