Ad Widget

தென்னிலங்கை மீனவர்கள் 39 பேர் கைது

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம், மற்றும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினுள், நிபந்தனைகளை மீறி கரையில் இருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் கடலட்டை பிடியில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் 39 பேரை சனிக்கிழமை (23) இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை (24) எம்மிடம் ஒப்படைத்துள்ளனர்’ என கடற்றொழில் நீரியல்வளதுறை திணைக்கள யாழ். மாவட்ட உதவிபணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

‘அத்துடன், அவர்கள் பயணம் செய்த 13 டிங்கி படகுகள், 2,264 கடலட்டைகள், 102 ஒக்சிசன் சிலிண்டர்;கள், 10 ஜீ.பி.ஸ் கருவிகள், நீரில் முழ்கி கடலட்டை பிடிக்க பயன்படுத்தும் ஆடைகள், மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்கள் என்பவற்றையும் கடற்படையினர் மீட்டு எம்மிடம் ஒப்படைத்துள்ளனர்’ என அவர் கூறினார்.

கைதான நபர்கள் அனைவரும் கடலட்டை பிடியினை தொழிலாக மேற்கொண்டு வரும் நிறுவனம் ஒன்றின் மீனவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கடலட்டை பிடிப்பதற்கு உரிய அனுமதியினை கடற்றொழில் நீரியல் வளதிணைக்களத்திடம் இவர்கள் பெற்றிருந்தாலும், வழங்கப்பட்ட அனுமதிபத்திரத்தின் நிபந்தனையினை மீறியுள்ள குற்றச்சாட்டில் இவர்களை கடற்படை கைது செய்துள்ளது.

‘கடலட்டை பிடியில் ஈடுபடுபவர்கள் கரையில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலேயே கடலட்டை பிடியில் ஈடுபடமுடியும்’ என உதவி பணிப்பாளர் மேலும் கூறினார்.

Related Posts