தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெல்லிப்பளையில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
யாழ். அரசியலில் இருக்கும் குப்பைகளை கழைந்து, நல்ல தலைவர்களை வெளியே கொண்டு வரவேண்டியது பொதுமக்களின் கடமை’
‘இப்போதைய சூழ்நிலையில் மீன்பிடி, விவசாயம், குளங்கள், வீடுகள், கோயில்கள், வீட்டுத்திட்டங்கள், எல்லாவற்றையும் அபிவிருத்தி செய்யவேண்டியுள்ளது. முப்பது வருட அரசியல் போராட்டம், முப்பது வருட ஆயுத போராட்டம் நடத்தி இருக்கின்றோம்.
அந்தவகையில், இப்போது நாங்கள் அபிவிருத்தி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். தென்னிலங்கையில் இருக்கும் மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை வடக்கில் உள்ள மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.
அதேவேளை, நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் நேர்மைக்கும், உண்மைக்குமே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், ஊடகங்கள் சமதர்மம் பேண வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.