தென்னிலங்கையை அதிரவைத்த குண்டு வெடிப்பு!: இராணுவ வீரர் கைது

தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் குறித்த பகுதியில் பேரூந்து ஒன்றில் கைக்குண்டு ஒன்று வெடித்தமை தென்னிலங்கையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரூந்தில் பயணித்த இராணுவ வீரர் ஒருவர் மூலமாகவே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்திருந்தனர்.

மேலும், சம்பத்திற்கு காரணமான இராணுவவீரர் பலத்தகாயங்களுக்கு உள்ளாகியிருந்தால் அவர் குணமடைந்ததும் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என அண்மையில் பொலிஸார் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இதேவேளை, குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தீவிரவாத செயற்பாடுகளுக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை என இராணுவத் தரப்பு தெரிவித்திருந்தது.

எனினும், இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்து 9 வருடங்களின் பின்னர் வெடித்த முதலாவது குண்டு என தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலர் குறிப்பிட்டு வருவதோடு, இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட சவால் எனவும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இவ்வாறான கருத்துகள் காரணமான தென்னிலங்கையில் அரசியல் மட்டத்தில் பல்வேறு விதமான முன்னுக்குபின் முரண்பட்ட வாதப்பிரதிவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் குறித்த பேரூந்து குண்டு வெடிப்பு தொடர்பில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts