தென்னிலங்கையில் தமிழர்களை அரச ஆதரவில் குடியேற்ற முடியுமா?; கோத்தபாயவிடம் கேட்கிறார் சம்பந்தன்

வடக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் மக்களை அரச ஆதரவில் ஏன் குடியேற்றுகிறீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். தெற்கில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெயர்ந்திருக்கும் எமது தமிழ் மக்களை அரச ஆதரவில் குடியேற்ற முடியுமா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று கேள்வியெழுப்பியுள்ளார்.
வடக்குப் பகுதி தமிழர்களுக்கே தனியான உரித்துடைய இடமில்லையென்ற அரசின் கருத்து தமிழர் பிரச்சினையை இவர்கள் இன்னமும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

பி.பி.சியின் கொழும்பு செய்தியாளருக்கு நேற்று முன்நாள் பேட்டியொன்றை வழங்கியிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வடபகுதி தமிழர்களுக்கு மட்டும் உரித்துடைய இடமில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் கூறியதாவது:

வடக்குப் பகுதி தனியாக தமிழர்களுக்கு மாத்திரம்தான் சொந்தமென்றோ அல்லது அது சிங்களவர்களுக்குச் சொந்தமில்லை என்றோ நாம் எப்போது கூறியிருக்கிறோம்? வடக்கு தமிழர்களுக்கு மட்டும்தான் சொந்தமென்று நாமோ எமது தலைவர் செல்வநாயகமோ எங்காவது கூறியிருக்கிறோமா?

வடக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் மக்களை அரச ஆதரவில் ஏன் குடியேற்றுகிறீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

தெற்கில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெயர்ந்திருக்கும் எமது தமிழ் மக்களை அரச ஆதரவில் குடியேற்றமுடியுமா என்று கேட்க விரும்புகிறேன்.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை இவர்கள் முதலில் விளங்கிக் கொள்ளவில்லை என்பது தான் எமக்குத் தெரிகிறது என்றார் சம்பந்தன் எம்.பி.

கோத்தபாய அரசியல்வாதிகளைப் போன்று செயற்படுவது ஆபத்தானது: ஐ.தே.க

அரசாங்கத்தில் ஒரு அதிகாரியாக மாத்திரம் இருந்து கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அரசியல்வாதிகளைப் போன்று செயற்படுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.அவரின் பொறுப்பற்ற கருத்துக்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணும் முயற்சிக்கு தடையாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியம் தமிழருக்கு மாத்திரம் சொந்தமான பகுதியல்ல என்று அவர் அண்மையில் சர்வதேச ஊடகத்திற்கு செவ்வியளித்திருந்தார்.

யார் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் என்று கூறியதுடன், தமிழர்கள் விடயமாக அவர் பாகுபாடான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

வட பிராந்தியத்தில் யாழ்ப்பாணம் தமிழர் பிரதேசம் என தொன்றுதொட்டு வரலாற்று ஆதாரங்களுடன் இருந்து வருகிறது. வடக்கில் கணிசமானளவு தமிழ் மக்களே வாழ்கின்றனர். இது உலகறிந்த உண்மையாகும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரச அதிகாரியான கோத்தபாய ராஜபக்ஸ பொறுப்பற்ற விதத்தில் பேசுவது தீர்வுத்திட்ட முயற்சிகளுக்கு தடையாகவே அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளையும் அரசாங்கம் அழைக்கின்றது. இருந்த போதும். இவ்வாறான நடவடிக்கைகள் தெரிவுக்குழு மீதான நம்பிக்கையை இல்லா மல் செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ கூறிய கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கண்டித்துள்ளதுடன் நிராகரித்துள்ளது.

Related Posts