தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
நேற்று மாலை 6 மணியளவில் வாக்குகள் என்னும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து நேரடியான செலுத்திய வாக்குகளை எண்ணினர். முதலில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில், சரத்குமார் அணியினர் முன்னிலை பெற்றிருந்தனர். உணவு இடைவேளைக்குப் பின்னர், உறுப்பினர்கள் நேரடியாக அளித்த வாக்குகள் எண்ணப்பட்டன.
முதல் இரண்டு சுற்றுகளில் முன்னிலை பெற்ற சரத்குமார் அணியினர், பின் அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கத் தொடங்கினர். பொதுச்செயலாளர் பதவிக்கு, முதன்முறையாக தேர்தலை சந்தித்த நடிகர் விஷால், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராதாரவியை வீழ்த்தி, வாகை சூடினார். நடிகர் விஷால், 1,445 வாக்குகள் பெற்றார். ராதாரவி 1,138 வாக்குகள் பெற்றார்.
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரத்குமார், நாசர் இடையே கடும் போட்டி நிலவியது. குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால், பரபரப்பு கூடியது. இறுதியில், நடிகர் நாசர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
நடிகர் நாசருக்கு 1,334 வாக்குகளும், நடிகர் சரத்குமாருக்கு 1,231 வாக்குகளும் கிடைத்தன. பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட, விஷால் அணியின் நடிகர் கார்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர் கார்த்தி, 1,384 வாக்குகளும், இவரைத் எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர். கண்ணன் 1,031 வாக்குகளும் பெற்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில், பாண்டவர் அணியினர், அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், காவல்துறைக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
நடிகர் சங்கத்தில் நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாசர் தெரிவித்துள்ளார்.
தோல்வியாக கருதவில்லை, எதிர் அணியின் வெற்றியாக பார்க்கிறேன்: சரத்குமார் பேட்டி
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு பேசிய சரத்குமார் “ நாசர் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பிருந்த காழ்ப்புணர்ச்சியை மறந்துவிட்டு, நடிகர் சங்கம் ஒற்றுமையாக செயல்படவேண்டும். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ஏன் சிறந்தது என்பது பற்றி விளக்கி கூறுவேன். தேவைப்பட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் உதவி செய்வேன். இதை எனது தோல்வியாக கருதவில்லை, எதிர் அணியின் வெற்றியாக பார்க்கிறேன். நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்” என்று தெரிவித்தார்.
தோல்வியை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்: ராதாரவி பேட்டி
நேற்று இரவு 11 மணி அளவில் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து ராதாரவி சோகத்துடன் வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம்,
“என்னைவிட 300 வாக்குகள் அதிகம் பெற்று விஷால் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் பட்ட சிரமத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சி, எனது தோல்வியை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.