இலங்கையில் மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அமைதியை உருவாக்குவது தொடர்பில் தென்னாபிரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் சந்தேகிக்கவில்லை.” – இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்யவிருக்கின்றனர்.
இந்த விஜயத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் வலிமையைக் குறைக்கும் விதத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக தென்னாபிரிக்கா விரிக்கும் வலையில் தமிழ்க் கூட்டமைப்பு விழுந்து விடக் கூடாது என்ற சாரப்பட சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டிருந்தார்.
அது குறித்து வினாவியபோதே இரா.சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
நாம் தென்னாபிரிக்காவுக்குச் செல்வதோ, அல்லது அதற்காக எமக்கு விடுக்கப்பட்ட அழைப்போ இப்போது நிகழ்ந்த விடயங்கள் அல்ல. ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸில் கூடுவதற்கு முன்னரே கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற விடயங்கள் அவை.
தென்னாபிரிக்கா அரசின் முயற்சிகளில் எமக்கு சந்தேகம் ஏதும் இல்லை. தென்னாபிரிக்கா அரசு மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் அழைப்பின் பேரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 9 ஆம் திகதி தென்னாபிரிக்கா செல்கின்றது. “இலங்கையில் நல்லிணக்கம், தீர்வு ஆகியன தொடர்பில் எமது நிலைப்பாட்டை இந்தப் பயணத்தின் போது தென்னாபிரிக்கா அரசிடம் நாம் தெளிவுபடுத்தவுள்ளோம்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த தென்னாபிரிக்கா ஜனாதிபதி, எம்மை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுகளை மீள ஆரம்பிப்பதற்கும் மற்றும் அனுசரணை வகிப்பதற்கும், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கும் தாம் பல முயற்சிகளை எடுத்துவருகிறார் என தென்னாபிரிக்க ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கை அரச குழுவையும், எம்மையும் தென்னாபிரிக்கா வருமாறு அந்நாட்டு அரசு அழைத்தது. ஆனால், மார்ச் மாதம் ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறும் வரைக்கும் தென்னாபிரிக்கா வந்து இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்த நாம் விரும்பவில்லை என்பதை அந்நாட்டு அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தோம். எனினும், இலங்கை அரச குழுவொன்று கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்கா சென்று அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.
கடந்த மாதம் ஜெனிவா தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில் எம்மை தென்னாபிரிக்கா வந்து இலங்கையின் நல்லிணக்கம், தீர்வு விடயம் தொடர்பில் தம்முடன் பேச்சு நடத்துமாறு அந்நாட்டு அரச தரப்பு தற்போது எமக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கமையவே நாம் எதிர்வரும் 9 ஆம் திகதி தென்னாபிரிக்கா செல்லவுள்ளோம். எமது பயணம் இரகசியமானதல்ல. இப்பயணம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரியும் பிரிட்டனுக்குத் தெரியும், இந்தியாவுக்குத் தெரியும்,ஐரோப்பிய யூனியனுக்குத் தெரியும். எனவே இந்த விஜயத்தால் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பங்கம் வந்துவிடும் என்று கருத்துவது அர்த்தமற்றது.
அதுபோல அந்தத் தீர்மானத்துக்குப் பின்னர்தான் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டதுமல்ல. அதற்கு முந்திய பேச்சுகள், ஏற்பாடுகளின் தொடர்ச்சிதான் இந்தப் பயணம். அதேபோன்று, தென்னாபிரிக்க அரசின் முயற்சிகள் குறித்து எமக்கு சந்தேகமும் ஏதும் இல்லை.” – இப்படி சம்பந்தர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றது கூட்டமைப்பு – சிவாஜிலிங்கம்
தென் ஆபிரிக்காவின் உதவியை நாடியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
தென்னாபிக்காவை பின்பற்றி இலங்கையில் உள்நாட்டுத் தீர்வு – டக்ளஸ்