தென்கொரியாவிற்கு விளையாடச் சென்ற நான்கு இலங்கையர்கள் மாயம்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தென் கொரியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஹொக்கி அணியின் வீரர்களில் நான்கு பேர் நாடு திரும்பவில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நால்வரும் படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த நால்வரும் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹொக்கிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து தலா 16 வீர, வீராங்கனைகள் அடங்கிய ஆண், பெண் அணிகள் இரண்டு சென்றிருந்தன.

அவர்களுடன் அதிகாரிகள் நால்வரும் சென்றிருந்தனர் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தென்கொரியாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை இராணுவ அதிகாரிகள் மாத்தளைக்கு சென்று காணாமல் போய் உள்ளதாக கூறப்படும் அந்த நான்கு வீரர்களின் உறவினர்களிடமும் அவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

17ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி தென்கொரியாவின் இன்சொன் நகரத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வரையிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts