20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் (குரூப்1) சந்தித்தன. தென்ஆப்பிரிக்க அணியில் டுமினி, கைல் அப்போட் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோசவ், ஆரோன் பாங்கிசோ இடம் பெற்றனர்.
‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி பந்து வீச்சை தேர்வு செய்தார். பவுலிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க வீரர்கள், வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 3-வது பந்திலேயே அம்லா (1 ரன்) ரன்-அவுட் ஆனார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (9 ரன்), ரோசவ் (0), டிவில்லியர்ஸ் (10 ரன்), டேவிட் மில்லர் (1 ரன்) ஆகிய முன்னணி வீரர்கள் வரிசையாக வெளியேற 47 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (8.2 ஓவர்) இழந்து தென்ஆப்பிரிக்கா ஊசலாடியது.
இந்த நெருக்கடியான கட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக்கும், டேவிட் வைசும் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டதுடன், 100 ரன்களை கடக்கவும் உதவி புரிந்தனர். குயின்டான் டி காக் 47 ரன்களிலும் (46 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), டேவிட் வைஸ் 28 ரன்களிலும் (26 பந்து) ஆட்டம் இழந்தனர்.
20 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது. கிறிஸ் மோரிஸ் 16 ரன்னுடன் களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆந்த்ரே ரஸ்செல், கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து 123 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீசுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ‘சிக்சர் மன்னன்’ கெய்ல் 4 ரன்னில் ரபடாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். பிளட்சர் 11 ரன்களிலும், ஜான்சன் சார்லஸ் 32 ரன்களிலும், வெய்ன் பிராவோ 8 ரன்னிலும் வீழ்ந்தனர். சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தார் 17-வது ஓவரில் ஆந்த்ரே ரஸ்செல் (4 ரன்), கேப்டன் டேரன் சேமி (0) இருவரையும் காலி செய்ய பரபரப்பு தொற்றியது. மறுமுனையில் மிரட்டிக்கொண்டிருந்த சாமுவேல்ஸ் 44 ரன்களில் (44 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார்.
கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ரபடா வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்காத கார்லஸ் பிராத்வெய்ட் 2-வது பந்தை சிக்சருக்கு அனுப்பி அட்டகாசப்படுத்தினார். அடுத்த பந்து வைடானாது. மீண்டும் வீசப்பட்ட 3-வது பந்தில் பிராத்வெய்ட் ஒரு ரன் எடுத்தார்.
இதையடுத்து 3 பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. 4-வது பந்தை சந்தித்த ராம்டின் வெற்றிக்குரிய ரன்னை எடுத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 3-வது வெற்றியை பதிவு செய்ததன் மூலம் இந்த பிரிவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி அரைஇறுதியை உறுதி செய்தது. 2-வது தோல்வியை சந்தித்த தென்ஆப்பிரிக்காவின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது.