தெங்கு பயிர் செய்கையை மேம்படுத்தும் ‘கப்புறுக்க புறவர திட்டம்’ யாழில் ஆரம்பம்

தெங்கு பயிர் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சினால் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘கப்புறுக்க புறவர திட்டம்’ கடந்த சனிக்கிழமை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை சாவகச்சேரி பிரதேச பிரிவில் உள்ள வரணிப்பகுதியில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவில் முதற்கட்டமான இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சர் ஏ.பி ஜெகத் புஸ்பகுமார, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா அகியோர் கலந்துகொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து தென்னை பயிர்ச் செய்கை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி கண்சாட்சியினையும் அமைச்சர் பார்வையிட்டதுடன் அப்பகுதியில் இன்றைய நிகழ்வை நினைவு கூரும் வகையில் மரநடுகையினையும் மேற்கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட பிரதேச செயலர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்டுள்ள கப்புறுக்க புறவர சங்கங்களிற்கான காசோலைகள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு தென்னம் கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிழ்வில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சர் ஏ.பி ஜெகத் புஸ்பகுமார, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சின் செயலாளர் டியால் சோமவீர, யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

palmera

தெங்கு உற்பத்தியாளர்களுக்கு மானிய அடிப்படையில் உரம்

நாட்டில் தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தெங்கு உற்பத்தியாளர்களுக்கு மானிய அடிப்படையில் உரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சர் ஏ.பி.ஜெகத் புஸ்பகுமார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

நாட்டில் பெருந்தோட்டப் பயிராக விளங்கும் தெங்குப் பயிர்ச்செய்கையை மேம்படுத்தவேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நாட்டில் விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய உரத்தினை தெங்கு உற்பத்தியாளர்களுக்கு மானிய அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4200 ரூபா உரத்தினை 1200 ரூபாவிற்கு வழங்கவுள்ளதுடன் 3000 ரூபாவினை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் 15 லட்சம் தென்னங்கன்றுகள் நடுகை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் கடந்த 2010ஆம் ஆண்டு 3 லட்சத்தி 310 தென்னங்கன்றுகளும், 2012ஆம் ஆண்டு 12 லட்சத்து 50 ஆயிரம் கன்றுகளும் நடுகை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நாங்கள் நினைத்துப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இருந்தாலும் அந்த நிலை மாறி இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டை அபிவிருத்திப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இலங்கையில் பின் தங்கிய மாவட்டமாக மொனரகலை மாவட்டம் உள்ளது. இங்கு வாழும் மக்கள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கி தங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து வருகின்றார்கள்.

அதேபோன்று இங்குள்ள மக்களும் கிடைத்திருக்கும் இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும். ஒரு செடி நன்றாக படரவேண்டும் என்றால் ஒரு மரத்தின் உதவி கட்டாயம் தேவை. அந்தச் செடியைப் போல நாங்களும் செயற்பட்டு எமது பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றார்.

யுத்தத்திற்குப் பின்னர் வடபகுதியில் தெங்கு உற்பத்திக்கு ஜனாதிபதி முக்கியத்துவம் கொடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இவரின் வழிகாட்டலில் பல திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். நாடுபூராகவும் 3000இற்கும் மேற்பட்ட கப்புறுக்க புறவர சங்கங்கள் அமைக்கப்பட்டு தெங்கு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு தனிப்பட்ட நபருக்கு 5 ஏக்கர் வரை தென்னம் கன்றுகள் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வரணியில் மாதிரித் தோட்டம் மற்றும் நாற்று மேடை திறந்துவைப்பு

யாழ். சாவகச்சேரி பிரதேச பிரிவில் உள்ள வரணிப் பகுதியில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சின் மாதிரித் தோட்டம் மற்றும் நாற்று மேடை ஆகியன திறந்துவைக்கப்பட்டுள்ளது.

50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மாதிரித்தோட்டம் மற்றும் நாற்று மேடையினை தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சர் ஏ.பி.ஜெகத் புஸ்பகுமார கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்று மேடை ஒரே தடவையில் 100 கன்றுகள் பதிவைக்க கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

Related Posts