தூர இடங்களில் சென்று கற்பிக்காதவர்களின் நியமனம் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படும் : வடக்கு முதலமைச்சர்!

நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் அனைவரும் தூர இடங்களில் சென்று பணியாற்றவேண்டும். இல்லையேல் அவர்களது நிரந்தர நியமனம் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கணித, விஞ்ஞான, தொழிநுட்ப பட்டதாரிகள் 212 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்.மத்திய கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுக்கென வழங்கப்பட்ட பாடசாலையில் கற்பித்தலில் ஈடுபடவேண்டும். வீட்டருகில் பாடசாலை இருந்தால் நல்லதென நினைக்கும் ஆசிரியர்களால் பாதிக்கப்படுவது மாணவர்களே.

அத்துடன், கல்வித் திணைக்களத்தினைச் சேர்ந்த குழுவொன்று பாடசாலைகளுக்கு வருகைதருமெனவும், அக்குழுவினால் உங்களது செயற்பாடுகள் திருப்திகரமில்லையெனத் தெரிவிக்குமிடத்து உங்கள் நியமனம் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்படும்.

இந்நிலையில் இங்கிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப்பெற்ற மாணவர்கள் வடமாகாணத்தில் எங்குவேண்டுமானாலும் பணியாற்றத் தயார் எனவும் தமக்கும் பணி நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர். தூரத்தைக் காரணம் காட்டும் ஆசிரியர்கள் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts