தூய தமிழை யாழில் கற்றேன் – மகாலிங்கம்

mahalingam-indiaயாழ்ப்பாணத்திற்கு வந்ததன் பின்னரே தான் தூய தமிழை கற்றுக்கொண்டதுடன், பழமொழிகளையும் தான் அறிந்துகொண்டதாக யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் வெ.மகாலிங்கம் தெரிவித்தார்.

மேலும், தான் அறிந்துகொண்ட பழமொழிகளை கோப்பாக வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கயானா நாட்டின் இந்திய உயர்ஸ்தானிகராக மாற்றலாகிச் செல்லவுள்ள வெ.மகாலிங்கத்திற்கு யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரிவுபசார நிகழ்வு நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘இந்திய வெளிவிவகார அமைச்சின் வேலைகள் வெளிநாடுகளிலும் மற்றும் புதுடில்லியிலும் இருந்தமையால், என்னை விட்டுத் தமிழ் சென்றுவிட்டது. இருப்பினும், யாழ்ப்பாணத்திற்கு வந்ததன் பின்னர் தூய தமிழை நான் கற்றுக்கொண்டேன். இது எனக்கு சந்தோஷமாகவுள்ளது.

இங்கு பலர் எனக்கு நண்பர்களாகியுள்ளனர். ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சு இராஜதந்திர வேலைகளை மட்டுமே செய்வது வழமை. இருந்தும், யாழ்ப்பாணத்திலுள்ள அதிகப்படியான தேவைகள் காரணமாக இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் இதர செயற்பாடுகளிலும் நான் ஈடுபட்டேன். எனக்கு இது புதிய அனுபவம்.

இந்த அனுபவத்தை தந்த யாழ்ப்பாண மக்களை நான் என்றும் மறக்கமாட்டேன். நான் மாற்றலாகிச் செல்லும் கயானா நாடு யாழ்ப்பாணத்தின் அளவுக்கே சனத்தொகை கொண்ட நாடு. அங்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாவிற்கு வந்தால், அவர்களை வரவேற்பதற்கு நான் காத்திருப்பேன்’ என்றார்.

வெ.மகாலிங்கம் எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts