தூபியை மீள அமைக்க அனுமதிவேண்டும், பொலிஸார் வெளியேறவேண்டும்; யாழ்.பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்துப் 9 மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்கவேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு பொலிஸார் விலகவேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வீதியில் கொட்டகை அமைத்து போராட்டம் நடத்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், நேரில் சென்று அனுமதியளித்தார்.

அவர்களை சுயதனிமைப்படுத்தவும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தவும் பெயர் விவரங்கள் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Related Posts