Ad Widget

துரையப்பா விளையாட்டரங்கு திறந்தவெளியரங்கு அல்ல, கட்டணம் செலுத்தும் அரங்கு!

துரையப்பா விளையாட்டு மைதானம் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டாலும் அது விளையாட்டு வீரர்களுக்கு பயன்படுவதில்லை என யாழ் மாவடட விளையாட்டு பிரிவு வடடாரங்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் ஜனவரி 18ம் ஆம் நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அவ் மைதானம் முழுமையாக யாழ்ப்பாண மாநகர சபையிடம் கையளிக்கப்படவில்லை. எனினும் மாநகர சபை அவ் மைதானத்துக்கு ஒருநாள் வாடகையாக 50,000 ரூபாவை வசூலிக்கிறது. இவ் பணத்தினை மாநகர சபை எந்தவிதமான விளையாட்டு சம்பந்தப்பட்ட விடயங்களுக்கும் வழங்குவதில்லை.

மேலும் அவ்மைதானத்தை சாதாரண பொது மக்கள்களோ விளையாட்டு வீரர்களோ பயன்படுத்தமுடியாத படி பூட்டி வைத்திருக்கிறார்கள். வடக்கு விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மைதானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடமுடியாத நிலைமையே காணப்படுகிறது.

யாழ். மாவட்டத்தில் உள்ள முன்னணி விளையாட்டு கழகங்கள் முறையான மைதானங்கள் இன்றி கடற்கரைகளிலும் தோப்புகளிலும் பயிற்சிகளை மேற்கொண்டு தேசிய ரீதியில் சாதித்து வருகின்றனர்.

எனவே யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தை அனைத்து வீரர்களும் பயனடையும் வகையில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் இல்லாவிடில் வேறு புதிய மைதானங்கள் அமைக்கப்படவேண்டும் எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் பொ. வாகீசனிடம் வினவியபோது,
இம்மைதானம் திறந்த வெளி மைதானம் இல்லை. கட்டணம் செலுத்தியே செல்லவேண்டும். மேலும் ஒருநாள் மைதான வாடகை மட்டுமே 50,000 எனவும் இரவு நேரங்களில் மின்விளக்கு மற்றும் உடட்பயிற்சி கூடங்கள் பயன்படுத்தினால் மேலதிகமான தொகை அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மைதானம் சம்பந்தமான வாடகை மற்றும் ஏனைய விபரங்கள் தங்களது அலுவலக இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் எனவும் தெரிவித்தார்.

Related Posts