துரையப்பா விளையாட்டரங்கத் திறப்பு விழா நயவஞ்சக நாடகம்!

மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜகட்டத்தில் நாதுராம் கோட்சே படத்தைத் திறந்து வைப்பதுபோல் தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு ஆல்பர்ட் துரையப்பா பெயரைச் சூட்டி, வண்ணங்கள் மிளிர வரையப்பட்டு திறப்பு விழா நடத்தி இருக்கிறார்கள் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில் நடைபெற்ற அர்மீனியர் படுகொலையை, அண்மையில் ஜேர்மன் பாராளுமன்றம் இனப்படுகொலை என அறிவித்து, அதற்கு நீதி வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.

ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களை, இலங்கைத் தீவில் இந்திய அரசின் துரோக துணையுடன் இலங்கை அரசு கொன்று குவித்த கோரமான இனப் படுகொலையை முற்றாக மூடி மறைக்கவும், படுகொலைக் குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தின் கவனத்திற்கே வராமல் தடுக்கவும், திட்டமிட்ட சதிவேலையை மிகத்திறமையாக இலங்கை அரசு செயல்படுத்துவதற்கு இந்திய அரசு பக்கபலமாக உதவுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் போரில் அழிக்கவும், அந்த நடவடிக்கையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்படவும் முழு மூச்சாகப் போர்க்களத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் தமிழ் இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வு அரும்பத் தொடங்கிய பின் அதனை வேருடன் பிடுங்கி எறிய இந்திய அரசும், அமெரிக்க அரசும் செய்த சதி ஓரளவு வெற்றி பெற்றது.

கொலைக் குற்றவாளியே அதை விசாரிக்கும் நீதிபதியாகலாம் என்ற அக்கிரமத்தை அரங்கேற்றும் வகையில் மனித உரிமைக் கவுன்சிலின் நடவடிக்கைகள் அமைந்தன. மனித உரிமைகள் ஆணையர் அல்ராட் ஹூசைன் இலங்கை அரசுக்கு உதவும் வகையிலேயே முன்னுக்குப் பின் முரணாக கருத்துகளைக் கூறி வருகிறார். இலங்கைத் தீவில் முழு அமைதி திரும்பிவிட்டது, ஈழத் தமிழர்கள் தற்போது நிம்மதியாக வாழ்கிறார்கள், கடந்த காலத்தை மறந்துவிட்டார்கள் என ஒரு மாயத்தோற்றத்தை அனைத்துலக நாடுகளுக்குக் காண்பிக்கும் வகையிலேயே துரையப்பா விளையாட்டு அரங்கத் திறப்பு விழா என்ற நயவஞ்சக நாடகத்தை இலங்கை – இந்திய அரசுகள் நடத்தியுள்ளன.

காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பற்றிய எந்த விபரங்களும் வெளிவரவில்லை. சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தமிழர்கள் விடுதலை ஆகவில்லை. சொந்த வீடுகளை இழந்து இராணுவம் காவல் புரியும் முகாம்களில் இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாடுகின்றனர்.

ஈழத்தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இந்தப் பின்னணியில்தான் துரையப்பா விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டு இருக்கிறது. துயர இருளில் இருந்து வெளிச்சம் கிடைக்காதா என ஏங்கும் தமிழர்களின் பிள்ளைகளை அரங்கத்திற்குக் கொண்டு வந்து யோகா பயிற்சியைக் காட்டி காணொளி மூலம் அரங்கத்தை திறந்து வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி கை தட்டி மகிழ்கிறார்.

1,87,000 தமிழர்கள் படுகொலை நிரந்தரமாக வரலாற்றுப் புதைகுழியில் மறைப்பதற்கான முயற்சி இது.

தங்கள் தாயக மண்ணில் மானத்தோடும், உரிமையோடும் வாழ்வதற்காக அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் அறவழியிலும் பின்னர் உலகில் பல நாடுகள் மேற்கொண்ட ஆயுதப்போர் வழியிலும் போராடி வந்தனர். ஈழத் தமிழ் இனத்தின் தனித்தன்மையைச் சிதைத்து, மக்கள் தொகையைக் குறைத்து, காலப்போக்கில் ஈழத் தமிழ் இனத்தை நிரந்தர இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்குகின்ற திட்டத்தோடு இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. அதனால் இன்றைக்கும் கொத்துக் கொத்தாக ஈழத்தமிழர்கள் அடைக்கலம் தேடிச் செல்லுகின்ற அவலம் தொடர்கிறது.

ரோமாபுரி பற்றி எரிந்தபோது மன்னன் நீரோ பிடில் வாசித்தான் எனப் பழிக்கப்படுகிறான், அதுபோல ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதி கேட்கின்றபோது மோடி விளையாட்டு அரங்கைத் திறந்து வைத்து விழா நடத்துகிறார். எருதுக்கு நோவு காக்கைக்குக் கொண்டாட்டம்,

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை ஒப்புக்காக கொழும்பில் நடத்த வேண்டுமென்றும் அதை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக தொடங்கி வைக்க வேண்டுமென்றும் இலங்கை அரசு நாடகமாடியதை ஈழத்தமிழர்கள் ஏற்கவில்லை. எனவே, ‘இது தமிழ் அரசுக் கட்சியின் விழா, அரசுக்கு விரோதமான விழா’ என்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்தது.

மாநாட்டைத் தனி தாயகம் அடிகளார் தொடங்கி வைத்தார். பன்னாட்டுத் தமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர். நிறைவு நாளான 10ம் திகதி அன்று யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் விழா நடைபெற்றபோது, அந்த அரங்கத்தின் வாயிற் கதவுகள் பூட்டப்பட்டன. மாநகர் மேயர் துரையப்பாவிடம் அனுமதி பெற்று வந்தால்தான் அரங்கம் திறக்கப்படும் என்றார்கள். துரையப்பா எங்கோ ஓடி ஒளிந்து கொண்டார். அவரே காவல்துறை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தார்.

திரண்டிருந்த கூட்டத்தின் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தினர். மக்கள் சிதறி ஓடினர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் வைத்தியநாதன் மயக்கம் அடைந்தார். பின்னர் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மின்சாரக் கம்பி அறுந்து கூட்டத்தின் மீது விழுந்தது. ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

மேலும் இருவர் தொடர்ந்து உயிர் இழந்தனர். அவர்கள் நந்தகுமார், கே.கேசவராசன், பு.சரவணபவன், இ.சிவானந்தம், வ.யோகநாதன், இ.தேவரட்ணம், பி.சிக்மறிலிங்கம், சி.ஆறுமுகம், சி.பொன்னுத்துரை ஆகியோர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். மாநாட்டுத் திடல் தமிழர்களின் இரத்தத்தால் நனைந்தது.

இன்றைக்கு மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜகட்டத்தில் நாதுராம் கோட்சே படத்தைத் திறந்து வைப்பதுபோல் தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு ஆல்பர்ட் துரையப்பா பெயரைச் சூட்டி, வண்ணங்கள் மிளிர வரையப்பட்டு திறப்பு விழா நடத்தி இருக்கிறார்கள். தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களுக்காக அங்கே வைக்கப்பட்டு இருந்த பெயர்ப்பலகை அழிக்கப்பட்டு விட்டது.

விளையாட்டு அரங்கம் திறப்பு என்பது போன்ற நரித்தந்திர வேலைகளால் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் குரலை அடக்க முடியாது.

உலகமெல்லாம் வாழும் தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களின் வளரும் பிள்ளைகளும் , தாய்த் தமிழகத்திலே வாழுகின்ற மான உணர்வு கொண்ட இளந்தமிழர்களும், சிங்கள, இந்திய அரசுகள் செய்கின்ற மாய்மால வேலைகளைப் புரிந்து கொண்டு தங்கள் கடமையைச் செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts