கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் மலையாள ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான். அவரது ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்துப்போகவே விக்ரமை வைத்து தான் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கும் அவரையே ஒளிப்பதிவாளராக பணியாற்ற வைத்தார் கௌதம் மேனன். சும்மா சொல்லக்கூடாது படப்பிடிப்பின் ஆரம்பத்திலேயே ஐந்து நிமிட டீசருக்காக ஜோமோன் ஒளிப்பதிவில் காட்டிய மாயாஜாலம் திரையுலகில் பலரையும் வியக்க வைத்தது.
ஆனால் சில நாட்களுக்கு முன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இருந்து ஜோமோன் வெளியேறிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரனின் மகன் சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற செய்தி வெளியானது. ஜோமோன் இந்தப்படத்தில் இருந்து விலக காரணம் என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான காரணத்தை ஜோமோனே கூறி சந்தேகத்தை நிவர்த்தி செய்துள்ளார்..
அதாவது கௌதமுக்கும், அவருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லையாம். எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பில் இருந்தபோது பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்சய் குமார் நடிக்கும் ‘கோல்மால் அகைன்’ படத்தில் பணியாற்ற முடியுமா என இவரை கேட்டிருந்தார்கள். ஆனால் அந்த தேதி காலதாமதம் ஆகவே அதற்குள் ‘துருவ நட்சத்திரம்’ வேலையை ஆரம்பித்து விட்டார் கௌதம் மேனன். இந்தநிலையில் இப்போது அங்கே ‘கோல்மால்’ பட வேலைகள் ஆரம்பிக்கவே கௌதமிடம் நிலைமையை விலக்கிவிட்டு மும்பைக்கு பறந்துவிட்டார் மனிதர்.
இதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம் தான் ஹைலைட்.. “நல்ல விஷயங்கள் தேடி வரும்போது அதற்கு கொஞ்சம் விலைகொடுத்துதான் ஆகவேண்டும். அதனால் பாலிவுட்டுக்கு போகிறேன். தொடர்ந்து கௌதமுடன் பணியாற்ற முடியாதது வருத்தம் தான்.. அதே சமயம் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து இரண்டு படங்களுக்கும் பணியாற்றுவதும் எனக்கு பிடிக்காது” என்று கூறியுள்ளார்.
இந்த ஒளிப்பதிவாளர் தான் தமிழில் ஒரு படம் ஒளிப்பதிவு செய்யாமல் திருமணம் செய்யமாட்டேன் என பிடிவாதம் காட்டி, அதன்பின் ‘பிரம்மன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பின்னர் தான் திருமணமே முடித்தார் என்பது கொசுறு தகவல்.