ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது. நாட்டில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கி பிரயோகங்களை தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மாறாக மக்கள் போராட்டத்தை முடக்க ஆயிரகணக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுப்படுத்தப்படுகிறார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எனக்கு முன்னதாக பேசிய அமைச்சர் யாழ்ப்பாண பிரதேசத்தில் வெங்காய உற்பத்தியைப் பற்றிக்கூறினார். அவர்களுக்கு மண்ணெண்ணெய் கொடுக்க வேண்டும் என்றார்.
ஆனால் இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக அந்த மக்கள் மண்ணெண்ணெய் இல்லாது பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். விவசாயிகள் நீரிறைக்கும் இயந்திரத்துக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தங்களது படகு இயந்திரங்களுக்கும் மண்ணெண்ணெய் இல்லாது அவஸ்தைப்படுகின்றனர்.
இந்த விடயத்தை எவ்வளவு தடவை எடுத்துக்கூறியும் அதற்கு எந்த விதமான பதிலும் கிடைக்க வில்லை. கிடைத்த ஒரேயொரு பதில் 87 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் 340 ரூபாவாக 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு மட்டுமே வந்ததே தவிர மண்ணெண்ணெய் கிடைக்கப்பெறவில்லை.
கஷ்டப்படுகின்ற விவசாயிக்கும் கடற்தொழிலாளிக்கும் இதுவரைக்கும் எந்த நிவாரணமும் கொடுக்கப்படவில்லை. இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் கூட மண்ணெண்ணெய் பாவிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென்ற முன்மொழிவு இருக்கின்றது. ஆனால் ஒதுக்கீட்டில் இந்த நிவாரணத்துக்காக ஒரு சதம் கூட ஒதுக்கப்படவில்லை.
இது என்றால் மத்தியவர்க்கம் மற்றும் அதற்கு மேற்பட்ட வர்க்கத்தை அமைதியாக்கும் அரசின் நோக்கத்தையே காட்டுகின்றது. மத்தியவர்க்கத்தின் கீழ் உள்ளவர்களையே அரசு பார்க்க வேண்டும் ஆனால் இங்கு மத்தியவர்க்கம் மற்றும் அதற்கு மேற்பட்ட வர்க்கத்தை அமைதியாக்கி சமாளிக்க அரசு முற்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக துப்பாக்கி சூட்டு மரணங்கள் அதிகரித்துள்ளன. அந்த மரணங்களை தடுக்கவோ சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் மக்களின் மாணவர்களின் போராட்டங்களை அடக்கவே பொலிஸ் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு இடத்தில் 500 பேர் ஆர்ப்பாட்டம் செய்தால் அங்கு 1,000 பொலிஸார் நிற்கின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க வழக்கமாக ஆங்கிலத்தில்தான் கையெழுத்திடுவார் ஆனால் அவர் ஜனாதிபதியானதன் பின்னர் 3 தடுப்புக் காவல் சட்ட ஆவணங்களிலும் சிங்களத்தில்தான் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அவரின் மன நிலை மாறி வருவதனைக் காண முடிகின்றது என்றார்.