துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் கத்திக்குத்தில் பலியானதாக சான்றிதழ்

இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது.

hasan-ali

குறித்த சம்பவங்கள் தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்திவந்தாலும் அந்த விசாரணைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளமையே இந்தக் கோரிக்கைக்கு காரணம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

இந்த ஆணைகுழு மூவினங்களையும் உள்ளடக்கிய, துறைசார்ந்த மற்றும் அனுபவம் கொண்டவர்களை உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அளுத்கம சம்பவத்தில் உயிரிழந்த முஸ்லிம்கள் துப்பாக்கி சூட்டில் உயிழந்ததாக உறவினர்கள் கூறுகின்றார்கள். ஆனால் கத்திக்குத்துக்கு இலக்காகி அவர்கள் உயிரிழந்ததாக மரண சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஹசன் அலி கூறினார்.

பொலிஸ் விசாரணைகளின் போது உண்மைக்கு புறம்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட முஸ்லிமகளினால் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சுதந்திரமான ஆணைக்குழுவொன்றின் மூலமே உண்மை நிலையை அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts